ராமமூர்த்தி நகர் : முக்கோண காதல் விவகாரத்தில், வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இரண்டு காதலிகள் மீது, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு, ராமமூர்த்திநகரில் வசித்தவர் சந்தோஷ், 27. தனியார் நிறுவன ஊழியர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அந்த நிறுவனத்தில் இளம்பெண் ஒருவர் வேலைக்கு சேர்ந்தார். சந்தோஷுக்கும், இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இருவரும் பல இடங்களுக்கு சுற்றுலா சென்றனர். நெருக்கமாக புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். சில மாதங்களுக்கு முன்பு, இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. காதலை முறித்துக் கொண்டனர்.
இந்நிலையில் நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த, இன்னொரு இளம்பெண்ணும், சந்தோஷும் காதலிக்கத் துவங்கினர். இதுபற்றி அறிந்த முன்னாள் காதலி, சந்தோஷிடம் தகராறு செய்தார். ‘காதலிக்கும்போது நெருக்கமாக எடுத்துக் கொண்ட, புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன்’ என்று மிரட்டினார்.
இதுபற்றி தனது குடும்பத்தினரிடம் சந்தோஷ் கூறினார். இதனால் அவருக்கும், முன்னாள் காதலிக்கும் திருமணம் செய்து வைக்க, பெற்றோர் முடிவு செய்தனர்.
இதற்கிடையில் முன்னாள் காதலி, நிறுவனத்தின் வேறு கிளைக்கு மாற்றப்பட்டார். இதற்கு சந்தோஷும், அவரது புது காதலியும் தான் காரணம் என்று நினைத்து, பழைய காதலி தகராறு செய்தார்.
இதனால் மனம் உடைந்த சந்தோஷ் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராமமூர்த்திநகர் போலீசில் முன்னாள், இன்னாள் காதலிகள் மீது, சந்தோஷின் சகோதரர் புகார் செய்தார். விசாரணைக்கு ஆஜராகுமாறு இரு காதலிகளுக்கும், போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement