உலகளாவிய பட்டினி குறியீட்டில் 111-வது இடத்தில் இந்தியா..? அறிக்கையை மறுக்கும் மத்திய அரசு!

சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலக பசிக் குறியீடு வெளியிடப்பட்டு வருகிறது. அயர்லாந்தைச் சேர்ந்த கன்சரன் வேர்ல்ட்வைட் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்பே ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன.

கன்சரன் வேர்ல்ட்வைட் | concern worldwide

அந்த அறிக்கையின்படி, “உலகளாவிய பட்டினி குறியீடு 2023-ல் 28.7 மதிப்பெண்களுடன் இந்தியா கடுமையான பசியின் அளவைக் கொண்டுள்ளது. இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாடு விகிதம் 16.6% ஆகவும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 3.1% ஆகவும் உள்ளது. உலகிலேயே அதிகமாக, குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு விகிதத்தில் இந்தியா 18.7%ஐ கொண்டுள்ளது. இது கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டை பிரதிபலிக்கிறது. குழந்தைகளின் உயரத்தைப் பொறுத்து அவர்களின் எடையின் அடிப்படையில் ஊட்டச்சத்து அளவிடப்பட்டுள்ளது.

125 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியா 111-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் 107-வது இடத்தில் இருந்த இந்தியா, நடப்பாண்டு மேலும் 4 இடங்கள் சரிந்துள்ளது. அதே நேரம், நடப்பாண்டு பட்டியலில் அண்டை நாடுகளான பாகிஸ்தான் 102-வது இடத்திலும், வங்கதேசம் 81-வது இடத்திலும், நேபாளம் 69-வது இடத்திலும், இலங்கை 60-வது இடத்திலும் உள்ளன. அதேபோல் சஹாராவுக்கு தெற்கே தெற்காசியா மற்றும் ஆபிரிக்கா போன்ற நாடுகள் கடுமையான பசியை எதிர்க்கொள்வதால் அவை கடைசி இடத்தில் உள்ளன.

ஊட்டச்சத்துக் குறைபாடு

இந்நிலையில் உலக பசி குறியீட்டு அறிக்கையை இந்திய அரசு நிராகரித்துள்ளது. இந்த ஆய்வறிக்கைக்குக் குறைபாடுள்ள அளவீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தியாவின் உண்மையான நிலையை அவை பிரதிபலிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்தக் குறியீட்டு முறையில் தீவிரமான வழிமுறை சிக்கல்கள் உள்ளன. மற்றும் தவறான நோக்கத்தை காட்டுகிறது. குறியீட்டைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் நான்கு அளவீடுகளில் மூன்று குழந்தைகளின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை. அவை ஒட்டுமொத்த மக்கள்தொகையை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருக்க முடியாது. நான்காவது மற்றும் மிக முக்கியமான காரணம் 3,000 என்ற மிகச் சிறிய மாதிரி அளவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு, மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் ஊட்டச்சத்து குறைபாடுகளை பிரதிபலிக்காது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.