வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆக்லாந்து: நியூசிலாந்தில் நடந்த பொதுத்தேர்தலில், அந்நாட்டு தேசிய கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, பிரபல தொழில் அதிபர் கிறிஸ்டோபர் லக்சன், 53, புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார்.
பசிபிக் கடல் தீவு நாடான நியூசிலாந்தின் பிரதமராக, 2017ல் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஜெசிந்தா ஆர்டெர்ன், தன் 37வது வயதில் தேர்வு செய்யப்பட்டார்.
உலகிலேயே மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமையை பெற்ற அவர், குடும்ப சூழல் காரணமாக தன் பதவியை கடந்த ஜனவரியில் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, அக்கட்சியைச் சேர்ந்த கிறிஸ் ஹிப்கின்ஸ் பிரதமராக பொறுப்பேற்றார்.
தொழிலாளர் கட்சியின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் நேற்று நியூசிலாந்தில் நடந்தது.
இதில், தொழிலாளர் கட்சி, தேசிய கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. தேர்தலை தொடர்ந்து, அதில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. இதில், தேசிய கட்சி 40 சதவீத ஓட்டுகளை பெற்றது.
அடுத்ததாக தொழிலாளர் கட்சி, 25 சதவீத ஓட்டுகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தது. இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காததை அடுத்து, சுதந்திரவாத ஏ.சி.டி., கட்சியுடன் கூட்டணி வைத்த தேசிய கட்சி, அங்கு ஆட்சி அமைக்க உள்ளது.
இதையடுத்து, நியூசிலாந்தின் புதிய பிரதமராக தேசிய கட்சியின் வேட்பாளர் கிறிஸ்டோபர் லக்சன் பதவியேற்க உள்ளார். தொழிலதிபரான இவர், பல்வேறு முன்னணி நிறுவனங்களில் உயர் பதவியில் பணியாற்றியவர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement