காஷ்மீரில் அமைதி ஏற்படுத்திய பிரதமர் மோடி: ஜேஎன்யு முன்னாள் மாணவர் சங்க துணை தலைவர் பாராட்டு

புதுடெல்லி: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடந்த 8 நாட்களாக மோதல் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். லட்சக்கணக் கானோர் புலம் பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில், ஜேஎன்யு முன்னாள் மாணவர் சங்க துணை தலைவர் ஷீலா ரஷீத் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும் போது, இந்தியராக இருப்பது எவ்வளவு அதிர்ஷ்டம் என்பதை உணர்கிறேன். நம்முடைய பாதுகாப்புக்காக இந்திய ராணுவமும் பாதுகாப்புப் படையினரும் தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்கின்றனர். காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டிய பெருமை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோரைச் சாரும்” என பதிவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஷீலா ரஷித் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ளார். இவர் கடந்த 2015-16-ல் ஜேஎன்யு மாணவர் சங்க துணைத் தலைவராக இருந்தார். அப்போது, ஜேஎன்யு மாணவர் சங்க தலைவராக இருந்த கண்ணையா குமார் உள்ளிட்டோர் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஷீலா போராட்டம் நடத்தினார்.

மேலும் கடந்த 2019-ம் ஆண்டு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வந்தார். “காஷ்மீரில் ராணுவம் பொதுமக்களின் வீடுகளை சூறையாடி அச்சமான சூழலை உருவாக்குகிறது” என சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இதுதொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடுத்த மனுதாரர்கள் பட்டியலில் இருந்த தனது பெயரை ஷீலா, கடந்த ஆகஸ்ட் மாதம் வாபஸ் பெற்றுக்கொண்டார். காஷ்மீரில் அமைதி திரும்பியதே இதற்குக் காரணம் என அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.