இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில்தான் தசரா திருவிழா விமர்சையாக நடைபெறும். இங்குள்ள அருள்மிகு ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டு தசரா திருவிழா இன்று (15-ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தசரா திருவிழாவை முன்னிட்டு நேற்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு காளி பூஜை நடைபெற்றது.

இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. காலை 6 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து காலை 9.15 மணிக்குக்கு கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக யானை மீது கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் செவ்வாடை அணிந்து கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து, விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள், தங்களது கைகளில் மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிந்து கொண்டனர்.பக்தர்கள் நேர்த்திக்கடனாகப் பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்து, விழா நிறைவில் கோயிலில் செலுத்துகின்றனர். திருவிழாவின் 1-ம் நாள் விழாவில் அம்பிகை முத்தாரம்மன், துர்கை அம்மன் அலங்காரத்திலும், 2-ம் நாள் விழாவில் விஸ்வகாமேஸ்வரர் அலங்காரத்திலும், 3-ம் நாள் விழாவில் பார்வதி அம்பிகை அலங்காரத்தில் அருள் பாலிக்கிறாள்.

அதேபோல, 4-ம் நாள் விழாவில் பால சுப்பிரமணியர் அலங்காரத்திலும், 5-ம் நாள் விழாவில் நவநீதகிருஷ்ணர் அலங்காரத்திலும் 6-ம் நாள் விழாவில் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்திலும், 7-ம் நாள் விழாவில் ஆனந்த நடராஜர் அலங்காரத்திலும், 8-ம் நாள் விழாவில் கஜலெட்சுமி அலங்காரத்திலும், 9-ம் நாள் விழாவில் கலைமகள் அலங்காரத்திலும் எழுந்தருளி ரத வீதிகளில் வீதியுலா வருதல் நடைபெறுகிறது.
10-ம் நாள் விழாவான வரும் 24-ம் தேதி, இரவு 11.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி கடற்கரையில் நள்ளிரவு 12 மணிக்கு மகிஷாசுரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. 11-ம் நாளான 25-ந்தேதி மாலை 4 மணிக்கு அம்மனுக்கு காப்பு களையப்படுகிறது. தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்களும் காப்புகளை களைந்து விரதத்தை முடித்து கொள்கின்றனர்.

12-ம் நாளான 26-ந்தேதி மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது. குலசேகரப்பட்டினத்தில் கோயில் வளாகம், கடற்கரை என, திரும்பும் திசையெங்கும் செவ்வாடை பக்தர்கள் நிறைந்து காணப்படுகிறார்கள். பக்தர்களின் ‘ஓம் காளி, ஜெய்காளி…’ என்ற காளிகோஷம் விண்ணை முட்டுகிறது.