“நக்சலிசத்தை காங்கிரஸ் ஊக்குவிக்கிறது'” – சத்தீஸ்கர் தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா குற்றச்சாட்டு

ஜக்தல்பூர்: நக்சலிசத்தை காங்கிரஸ் கட்சி ஊக்குவிப்பதாக சத்தீஸ்கர் மாநில தேர்தல் பிரச்சாரத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டினார்.

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல்கட்டத் தேர்தல் நவம்பர் 7-ம் தேதி 20 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 17-ம் தேதி 70 தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் இம்மாநிலத்தை மீண்டும் பாஜக வசம் கொண்டு வர அக்கட்சி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜக்தல்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “நக்சல் தீவிரவாதத்தால் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட மாநிலம் சத்தீஸ்கர். இதன் காரணமாகவே, இம்மாநிலம் வளர்ச்சியில் பின்தங்கி இருந்தது. நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதை அடுத்து, நக்சல் தீவிரவாதத்தை ஒழிக்க பல்வேறு முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டார்.

பஸ்தர் மாவட்டமும், அம்மாவட்டத்தில் உள்ள ஜக்தல்பூரும் ஒரு காலத்தில் நக்சல் தீவிரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. இன்னும் சில இடங்களில் அச்சுறுத்தல் நீடிக்கிறது. மாநிலத்தில் பாஜகவை ஆட்சியில் அமர்த்துங்கள், ஒட்டுமொத்த மாநிலத்தையும் அச்சுறுத்தலில் இருந்து விடுவிப்போம். கடந்த 9 ஆண்டுகளில் சத்தீஸ்கரில் நக்சல் வன்முறை சம்பவங்கள் 52 சதவீதம் குறைந்துள்ளன. உயிரிழப்புகள் 70 சதவீதம் குறைந்துள்ளன. பொதுமக்கள் இறப்பு 68 சதவீதம் குறைந்துள்ளது. நக்சல்களால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 62 சதவீதம் குறைந்துள்ளன.

நக்சலிசத்தை காங்கிரஸ் கட்சி ஊக்குவிக்கிறது. ஆனால், நக்சலிசத்தை வேரோடு அகற்ற பாஜக உறுதிபூண்டுள்ளது. எனவே, காங்கிரசின் கைகளில் இருந்து சத்தீஸ்கரை விடுவித்து பாஜக வசம் ஒப்படைக்க வேண்டும். சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு அனுப்பும் பணம், காங்கிரஸின் ஏடிஎம் மூலம் டெல்லிக்கு திருப்பி விடப்படும். இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் முன் இரண்டு வழிகள் உள்ளன, ஒன்று நக்சலிசத்தை ஊக்குவிக்கும் காங்கிரஸ், மறுபுறம் நக்சலிசத்தை ஒழிக்கும் பாஜக. கோடிக்கணக்கான ரூபாய்களை டெல்லிக்கு அனுப்பும் காங்கிரஸ், கோடிக்கணக்கான ஏழைகளுக்கு கேஸ் சிலிண்டர்கள், கழிவறைகள், குடிநீர், சுகாதார வசதிகள், தானியங்கள் மற்றும் வீடுகளை வழங்கி வரும் பாஜக.

பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள பழங்குடியினரின் நலனுக்காக நிறைய பணிகளைச் செய்துள்ளார். நீர், காடு, நிலம் ஆகியவற்றைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், பழங்குடி மக்களுக்கு உரிய மரியாதை கிடைக்கச் செய்திருக்கிறார். அனைவரையும் உள்ளடக்கியதாக பிரதமர் மோடியின் ஆட்சி உள்ளது. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அப்போது சத்தீஸ்கர் மக்கள் தீபாவளியை மூன்று முறை கொண்டாடுவார்கள். பண்டிகை நாளில் ஒரு முறையும், தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள டிசம்பர் 3-ஆம் தேதி இரண்டாவது முறையும், ஜனவரியில் நடைபெற உள்ள அயோத்தி ராமர் ஆலய கும்பாபிஷேக விஷாவின்போது மூன்றாவது முறையும் சத்தீஸ்கர் மக்கள் தீபாவளி கொண்டாடுவார்கள்” என்று அமித் ஷா உரை நிகழ்த்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.