திருமலை: திருப்பதி நவராத்திரி பிரம்மோற் சவத்தின் 4-ம் நாளான நேற்று காலை கற்பகவிருட்ச வாகனத்திலும், இரவு சர்வ பூபால வாகனத்திலும் உற்சவ மூர்த்திகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற் சவம் வெகு விமரிசையாக நடை பெற்று வருகிறது. கடந்த 15-ம் தேதி இரவு, பெரிய சேஷ வாகன சேவையுடன் தொடங்கப்பட்ட இவ்விழாவில் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் வாகன சேவை சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரம்மோற்சவத் தின் 4-ம் நாளான நேற்று காலை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் வாகனமண்டபத்தில் இருந்து கற்பகவிருட்ச வாகனத்தில் பவனி வந்துபக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ராஜமன்னார் அலங்காரத்தில் காட்சியளித்த மலையப்பரை திரளான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். மாட வீதிகளில் ஆரத்தி எடுத்து பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு வழிபட்டனர். இதைத்தொடர்ந்து இரவு சர்வ பூபால வாகனத்தில் உற்சவர்களான தேவி, பூதேவி சமேத மலையப் பர், மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இன்று கருட சேவை: நவராத்திரி பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளான 5-ம் நாள் விழாஇன்று நடைபெறுகிறது. இதில்காலையில் மோகினி அலங்காரத்தில் மலையப்பரும், உடன் ஸ்ரீ கிருஷ்ணரும் மாட வீதிகளில் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கஉள்ளனர். இதைத்தொடர்ந்து இரவு7 மணிமுதல் 12 மணி வரை கருடவாகனத்தில் உற்சவரான மலையப்பர் காட்சியளிக்க உள்ளார்.
இதில் சுமார் 3 லட்சம் முதல் 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி சுமார் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அலிபிரி தொடங்கி,திருமலை முழுவதும் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
திருப்பதி – திருமலை இடையே பேருந்து போக்குவரத்தும் அதிகரிக் கப்பட்டுள்ளது. விபத்துகளை தவிர்க்கும் நோக்கத்தில் நேற்று மாலை 6 மணி முதல் திருமலைக்கு பைக்குகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.