“ரங்கசாமி ஒரு நிமிடம் கூட புதுச்சேரி முதல்வராக நீடிக்கக்கூடாது” –  நாராயணசாமி காட்டம் 

புதுச்சேரி: “புதுச்சேரி முதல்வராக ஒரு நிமிடம் கூட ரங்கசாமி நீடிக்கக்கூடாது. அவர் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: அமைச்சராக சந்திரபிரியங்கா நீடிக்கிறாரா? அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டாரா? என மக்களிடம் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. இதற்கு பதிலளிக்க வேண்டிய ரங்கசாமி 10 நாட்களாக எந்த பதிலும் கூறாமல் மவுனமாக இருந்து வருகிறார். சந்திரபிரியங்கா ராஜினாமா ஏற்கப்பட்டதா? அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டாரா? என்பது புதுச்சேரி மக்களுக்கு புரியாத புதிராக உள்ளது. ஆளுநர் தமிழிசை, இதுதொடர்பாக இனி எந்த கருத்தும் கூற மாட்டேன் என தெரிவித்துள்ளார். ஆளுநர் தனது ரகசிய காப்பு பிரமாணத்தை மீறியுள்ளார். அவர் ராஜினாமா செய்ய வேண்டும் எனg கூறினேன். அதை ஏற்காமல், ஆளுநருக்கு எதிராகப் பேசுவது தான் என் வேலை என என்னை விமர்சித்துள்ளார்.

நம் கடமையை செய்யும்போது இம்மியளவும் பிறழாமல் வேலை செய்ய வேண்டும். ஆளுநர் எதற்கெடுத்தாலும் பேட்டி கொடுக்கிறார். ஆளுநர் வேலையை தவிர மற்ற வேலைகளை தமிழிசை செய்து வருவது வாடிக்கையாக உள்ளது. முதல்வர் ரங்கசாமி அனுப்பிய, அமைச்சர் பதவி நீக்கத்தை உள்துறை அமைச்சகம் நிராகரித்துவிட்டதாக தகவல் வந்துள்ளது. இதன்மூலம் சந்திரபிரியங்கா ராஜினாமா ஏற்கப்படவில்லை. முதல்வர் கொடுத்த நீக்கல் கடிதமும் ஏற்கப்படவில்லை.

எனவே சந்திரபிரியங்கா தொடர்ந்து அமைச்சராக நீடிக்கிறார். சட்டப்பேரவை தலைவர் செல்வம், சந்திரபிரியங்கா எம்எல்ஏவாக செயல்படுகிறார் என தெரிவிக்கிறார். முன்னுக்கு பின் முரணாக இவர்கள் பதிலளித்து வருகின்றனர். சந்திரபிரியங்கா தனது தொகுதியில் ஒருநிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார். அவர் அலுவலகத்திலிருந்து அமைச்சராக நீடிக்கிறார் என செய்தி வெளியாகிறது. இது போன்று புதுச்சேரி மக்களை ஏமாற்றும், உண்மையை சொல்லாத மர்மமான என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக ஆட்சி நடக்கிறது.

என்ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதால், முதல்வர் கடிதம் உள்துறை அமைச்சகத்தால் ஏற்கப்படவில்லை. இந்த நாடகத்தை பாஜக முழுமையாக அரங்கேற்றி வருகிறது. ரங்கசாமிக்கு நெருக்கடி தரும் வேலையை பாஜக செய்து வருகிறது. புதுச்சேரியை சேர்ந்த பாஜகவினர் ரங்கசாமிக்கு ஆதரவாக இருப்பதுபோல நாடகமாடி இரட்டை வேடம் போடுகின்றனர். என்ஆர்.காங்கிரஸை சேர்ந்தவர்கள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என மற்றொரு நாடகமாடுகின்றனர்.

திரைமறைவில் இவர்கள் ஆடிய நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாஜகவை தூண்டிவிடுவதும், என்.ஆர்.காங்கிரஸாரை தூண்டிவிடுவதும் ரங்கசாமிதான். எல்லோரையும் கோரிக்கை வைக்கச்சொல்லி ரங்கசாமி வேடிக்கை பார்க்கிறார். உள்துறை முதல்வர் கடிதத்தை நிராகரித்துவிட்டதால் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் முதல்வராக இருக்க தகுதியில்லை. ஒரு முதல்வருக்கு அமைச்சரை நியமிக்கவும், நீக்கவும் அதிகாரம் உண்டு.

அந்த அதிகாரத்தில் உள்துறை அமைச்சகம் நேரடியாக ஈடுபட்டுள்ளது. எனவே முதல்வர் பதவியில் ரங்கசாமி நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார். ஒருநிமிடம் கூட ரங்கசாமி முதல்வராக நீடிக்கக்கூடாது. எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் . அதுதான் அவருக்குள்ள மரியாதையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.