சென்னை: நாட்டில் கனமழை, வெள்ளம், சுனாமி, நில நடுக்கம், புயல் போன்ற பேரிடர்களால் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்தன. 2004-ம் ஆண்டு வங்கக் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட சுனாமியால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள்பறிபோயின. இதுபோன்ற பேரிடர் உயிரிழப்புகளைத் தடுக்க 2005-ம் ஆண்டு மத்திய அரசால் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. அதன் மூலம் பல்வேறு படிப்பினைகள் அடிப்படையில் சிறந்த நடைமுறைகளை உருவாக்கி, பேரிடர்களால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும் சில உயிரிழப்புகள் ஏற்பட்டுவிடுகின்றன. அதையும் தடுக்கும் நோக்கில்தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்மற்றும் இந்திய தொலைத் தொடர்புத்துறை ஆகியவை இணைந்து நவீன தொழில்நுட்பத்தில் ‘செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ என்ற மென் பொருளை உருவாக்கியுள்ளன. இந்த தொழில்நுட்பம் ஒவ்வொரு மாநிலமாக பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நேற்று தமிழகத்தில் பரிசோதிக் கப்பட்டது.