“நான் விவசாயம் செய்யப் போகிறேன்…'' ஜனாதிபதி முர்மு ஏன் சொன்னார் தெரியுமா?

நாட்டில் விவசாயம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகிறது. மற்றொருபுறம் கார்ப்ரேட் நிறுவனங்கள் விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்திருக்கின்றன. அதோடு படித்து லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள் கூட வேலையை ராஜினாமா செய்துவிட்டு விவசாயம் செய்ய வரும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வரிசையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவும் இணைந்துள்ளார். தனது ஜனாதிபதி வேலை முடிந்தவுடன் சொந்த ஊருக்கு சென்று விவசாயம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். அவர் பீகாரில் 4-வது விவசாய மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக வந்திருந்தார். அதில் கலந்து கொண்டு பேசுகையில்,”நானும் விவசாயி மகள்தான். எனது வேலை முடிந்த உடன் சொந்த ஊருக்கு சென்று விவசாயம் செய்ய இருக்கிறேன்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு

அப்போது பீகாருக்கு வந்து எப்படி விவசாயம் செய்கிறார்கள் என்றும், எப்படி தானியங்களை சேமித்து வைக்கிறார்கள் என்றும், விளைச்சலை அதிகரிக்க என்ன செய்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்வேன். நானும் ஒரு வகையில் பீகாரிதான். எனது சொந்த மாநிலமான ஒடிசா வரலாற்று ரீதியாக பீகாருடன் தொடர்புடையது. எனவேதான் என்னை நான் பீகாரி என்று அழைத்துக்கொள்கிறேன்.

பீகாருக்கு நான் இப்போதுதான் முதல் முறையாக வருகிறேன் என்றாலும், பீகார் மக்கள் குறித்தும், அவர்களின் கலாச்சாரம் குறித்தும் நான் நன்கு அறிவேன். அண்டை மாநிலமான ஜார்க்கண்டில் ஆறு ஆண்டுகள் ஆளுநராக இருந்திருக்கிறேன். இதனால் பீகார் மக்களின் கலாச்சார அனுபவம், வாழ்க்கை முறை எனக்கு நன்றாகத் தெரியும்” என்று குறிப்பிட்டார். நாட்டில் பழங்குடியின சமுதாயத்தில் இருந்து ஜனாதிபதி பதவிக்கு வந்த முதல் பெண் முர்மு ஆவார்.

மாநாட்டில்…

அதோடு இந்தியாவின் இரண்டாவது பெண் ஜனாதிபதி என்ற பெருமையும் முர்முவிற்கு உண்டு. 1912-ம் ஆண்டு வரை பீகாரும், ஒடிசாவும் ஒரே மாநிலமாகத்தான் இருந்தது. 1912-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதிதான் இரு மாநிலங்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டது. ஜனாதிபதி முர்மு தனது சொந்த ஊரான ஒடிசாவில் படிப்பை முடித்தவுடன் நீர்ப்பாசனத் துறையில் முதலில் வேலைக்குச் சேர்ந்தார். அதன் பிறகு சில ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார். 1997-ம் ஆண்டு முர்மு பா.ஜ.க.கட்சியில் சேர்ந்து கவுன்சிலரானார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.