ஆன்லைனில் கரண்ட் பில் கட்டுபவரா நீங்கள்… இந்த மெசேஜ் வந்தால் மிக மிக ஜாக்கிரதை!

Online Electricity Bill Scam: மின்சார கட்டணம் கட்டுவதற்கு முன்பெல்லாம் அதுசார்ந்த அலுவலகம் சென்று கட்ட வேண்டிய சூழல் இருந்தது. தற்போது அது பெரிதும் குறைந்துவிட்டது ஆன்லைனிலேயே பலரும் தங்களது வீட்டின் அல்லது வணிகம் செய்யும் இடத்தின் மின்சார கட்டணத்தை செலுத்திவிடுகின்றனர். கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலமாகவும் இப்போது மின்சார கட்டணங்களை செலுத்தலாம்.

அன்பார்ந்த வாடிக்கையாளரே…

அந்த வகையில், நீங்கள் மின்சார கட்டணத்தை ஆன்லைனில் (Online Electricity Bill) கட்டுபவராக இருந்தால் இந்த ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வை பெற்றிருப்பதும் அவசியமாகிறது. ஆன்லைனில் மின்சார கட்டணம் செலுத்தும் வழக்கம் உள்ள பலர் இந்த மோசடி வலையில் சிக்கி பணத்தை இழக்கும் சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளன. அந்த மோசடி குறித்தும், அதில் சிக்காமல் தப்பிக்கும் வழி குறித்தும் இதில் காணலாம்.

“அன்பார்ந்த வாடிக்கையாளரே, உங்கள் மின்சார இணைப்பு இன்று இரவு 9.30 மணிக்கு துண்டிக்கப்படும் என்பதை மின்சார கழகம் சார்பில் தெரிவிக்கிறோம். ஏனென்றால், உங்களின் கடந்த மாத மின்சார  கட்டணம் முறையாக அப்டேட் செய்யப்படவில்லை. உடனடியாக உங்கள் அதிகாரியை இந்த எண்ணில் 98658XXX76 தொடர்புகொள்ளுங்கள். நன்றி” என ஆங்கிலத்தில் வரும் மெசேஜ்கள்தான் மோசடியின் முதல் படி. இதுபோன்ற மெசேஜ் உங்கள் மொபைலுக்கோ அல்லது வாட்ஸ்அப் செயலிக்கோ வந்தால், தயவு செய்து அந்த எண்ணுக்கோ அல்லது அதனுடன் வரும் இணைப்பையோ (Link) கிளிக் செய்ய வேண்டாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

உண்மையா… போலியா…

நாட்டில் இதுபோன்ற மெசேஜ்களை பலரும் பெற்றுள்ளனர். மேலும் இது ஒரு தந்திரம் வாய்ந்த மெசேஜ் ஆகும். உங்களை ஓர் அவசர மனநிலையில் சிக்கவைத்து உங்களின் தனிப்பட்ட தகவல்களையோ அல்லது பணத்தையோ மோசடிக்காரர்கள் பெறுவதற்கான திட்டமாகும். இதுபோன்ற மோசடிகள் அனைத்தும் அதிகாரிகள் என்ற போர்வையில் போலியாக அனுப்பப்படுபவையாகும். 

நீங்கள் மின்சார கட்டணத்தை முறையாக செலுத்தவில்லை என்றும் உங்களின் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் ஒருவரை பதற்றத்திற்கு உள்ளாக்கின்றனர், மோசடிக்காரர்கள். இந்த பதற்றமும் அவரசத்தையும்தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அதன்மூலம், அவர்கள் உங்களிடம் இருந்து பணத்தை பறிக்க திட்டமிடுவார்கள். 

இருப்பினும், பார்ப்பதற்கு போலி என்றே தெரியாத அளவு நேர்த்தியாக அந்த மெசேஜ் அனுப்பப்படலாம். ஒரு சில மோசடிக்காரர்கள் அதிகாரப்பூர்வ இலட்சிணை, மாநில மொழிகள், வாடிக்கையாளரின் பெயர், விவரம் ஆகியவற்றுடனும் வரலாம். இது உண்மையானதா போலியா என்ற குழப்பம் அதிகமாகும். இதில் இருந்து தப்பிப்பவர்களை விட சிக்குபவர்கள்தான் அதிகம். ஒருமுறை நீங்கள் அந்த லிங்கை அழுத்திவிட்டால் உங்களின் வங்கிக் கணக்கு வரை அவர் செல்லவும் வாய்ப்புள்ளது என்பதை மறக்க வேண்டாம்.

நினைவில் கொள்ளவும்

இதுபோன்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் தனக்கு மின்சாரத் துறையைச் சேர்ந்த அதிகாரி என்று கூறி ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் மின்கட்டணம் பாக்கி இருப்பதாகவும், அதை உடனடியாக செலுத்தாவிட்டால், மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும் தொலைபேசியில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 

கட்டணத்தை எப்படி செலுத்துவது என்று அந்த பாதிக்கப்பட்ட நபர் கேட்டபோது, TeamViewer Quick Support மொபைல் செயலியைப் பதிவிறக்குவதற்கான இணைப்பை அந்த மோசடி செய்த நபர் அனுப்பி உள்ளார். பாதிக்கப்பட்டவர் செயலியைப் பதிவிறக்கியவுடன், மோசடி செய்பவர் அவரது வங்கிக் கணக்கிற்கான அணுகலைப் பெற்றதாக தெரிகிறது. அவரது வங்கிக் கணக்கில் இருந்த அனைத்து பணத்தையும், மொத்தம் ரூ.4.9 லட்சத்தை மோசடிக்காரர் தனது சொந்தக் கணக்கிற்கு மாற்றியுள்ளார். 

இதுபோன்ற மோசடியில் இருந்து தப்பிக்க ஒரே வழி, எந்த இணைப்பையும் கிளிக் செய்யவே கூடாது. இதுபோன்ற மெசேஜ்கள் வந்தால், நேரடியாக மின்சார அலுவலகத்திற்கு சென்று குழப்பத்தை தீர்த்துக்கொள்ளலாம். மேலும், எந்த அதிகாரியின் எண்ணோ அல்லது அதிகாரியோ உங்களுக்கு நேரடியாக போன் செய்து மின்சார கட்டணம் செலுத்தும்படி கேட்க மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளவும். இதுபோன்ற மோசடியில் சிக்கினால் உடனே சைபர் காவல்துறையிடம் தயங்காமல் புகார் அளிக்கவும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.