பா.ஜ.,வில் இருந்து விலகல் : நடிகை கவுதமி கூறும் காரணம் என்ன.?

சென்னை: பா.ஜ., நிர்வாகி அழகப்பன் உள்ளிட்டோர் தனது ரூ.25 கோடி சொத்துகளை அபகரித்ததாக நடிகை கவுதமி புகார் அளித்திருந்தார். இது தொடர்பான பிரச்னையில், இன்று (அக்.,23) பா.ஜ.,வில் இருந்து நடிகை கவுதமி விலகினார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் நடித்தவர் கவுதமி. பல ஆண்டுகளாக பா.ஜ.,வில் இருந்து வந்தார். மேலும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். கவுதமி, கோட்டையூரில் ரூ.7.70 கோடி மதிப்புள்ள சொத்துகள் உட்பட தனக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துகளை அபகரித்ததாக இரு புகார்களை கடந்த செப்டம்பர் மாதம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்தார். அதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்தார். மோசடி செய்த அழகப்பனுக்கு மூத்த பா.ஜ., தலைவர்கள் சிலர் உதவுவதாகவும் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக கவுதமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛நான் 25 ஆண்டு காலமாக பா.ஜ.,வில் இருந்தேன். பா.ஜ., நிர்வாகியான அழகப்பன் என்பவர் என்னை மிரட்டி சொத்துக்களை பறித்தார். இது தொடர்பாக யாரும் கேள்வி கேட்காமல் அவருக்கு ஆதரவாக இருந்தனர். மன வேதனையுடன் கட்சியில் இருந்து வெளியேறுகிறேன்''. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விலகலை தொடர்ந்து வழக்கு பதிவு
பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்த சில மணி நேரத்தில், அவர் அளித்த இரு புகார்களிலும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அழகப்பன், அவரது மனைவி உட்பட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் தற்போது தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.