''இன்று வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் இயங்கும்” –  தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆகிய தொடர் விடுமுறையையொட்டி, ஏராளமான பொதுமக்கள் அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், கூடுதல் கட்டண புகார் தொடர்பாக தமிழகம் முழுவதும் 120 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர். இந்த பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு விதிமீறலில் ஈடுபட்ட120 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதோடு 2,092 பேருந்துகளுக்கு ரூ.37 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சூழலில் ஆம்னி பேருந்துகளுக்கு கட்டண நிர்ணயம் இல்லாத போதிலும், அரசுக்கும் பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சங்கங்களே கட்டண நிர்ணயம் செய்துள்ளன.

இதனை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் ஆணையரிடம் ஒப்புதல் பெற்று, அதே கட்டணத்தில் இன்று வரை இயக்கி வருகிறோம் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது குறிப்படத்தக்கது. இது தொடர்பாக முதல்வருக்கு கடிதமும் சங்கத்தின் சார்பில் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர் மாறன், “தமிழ்நாட்டில் இன்று வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் இயங்கும். மக்கள் பீதியடைய வேண்டாம். எங்கள் சங்கத்தில் 1,500 வாகனங்கள் உள்ளன. அவை அனைத்தும் இயங்கும். வெளிமாநில பதிவு எண் கொண்ட வாகனங்களே சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன’’ எனத் தெரிவித்திருக்கிறார்.

அதே நிலையில், அதிக கட்டணம் வசூல் செய்த காரணத்தால்,120 ஆம்னி பேருந்துகளை அரசு பறிமுதல் செய்ததை கண்டித்து, இன்று மாலை 6 மணி முதல் பேருந்துகள் இயங்காது;பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு போராட்டம் அறிவித்துள்ள நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.