சென்னை: கிரிக்கெட் போட்டியில் தேசியக்கொடி அவமதிப்பு; காவலர்மீது உடனடியாகப் பாய்ந்தது நடவடிக்கை!

நேற்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி நடைபெற்றது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் எழுப்பப்பட்ட கோஷம் பெரும் சர்ச்சையை எழுப்பியது. இந்த சூழலில், சென்னையில் பாகிஸ்தான் விளையாடிய இந்தப் போட்டி, அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

தேசியக்கொடியுடன் எஸ்.ஐ

இந்த நிலையில், சேப்பாக்கம் மைதானத்துக்குள் இந்திய தேசியக்கொடி கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக ரசிகர்கள் குற்றம்சாட்டினர். இருந்தபோதிலும், காவல்துறை தரப்பில் தேசியக்கொடியை எடுத்துச் செல்ல எந்த தடையும் கிடையாது என்று தகவல் தெரிவித்திருக்கிறார்கள். மதியம், ரசிகர்கள் மைதானத்துக்குள், இந்திய தேசியக்கொடிகளுடன் சென்றனர். அப்போது, அங்குப் பணியிலிருந்த எஸ்.ஐ ஒருவர், அவர்களிடமிருந்து தேசியக்கொடியைப் பறிமுதல் செய்தார்.

பறிமுதல் செய்த தேசியக்கொடியை அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் போட, அவர் முயற்சி செய்தார். நிருபர்கள், பத்திரிகையாளர்கள் என பலரும் அருகில் அதைப் படமெடுத்துக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்துச் சுதாரித்துக்கொண்ட எஸ்.ஐ, குப்பைத் தொட்டியில் போடவிருந்த கொடியை உடனே வெளியே எடுத்து அருகிலிருந்த போலீஸ் ஜீப்பில் வைக்கச் சென்றுவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் பரவி பேசுபொருளானது.

தேசியக்கொடியுடன் எஸ்.ஐ

அரசியல் தலைவர்கள் உட்படப் பலரும் எஸ்.ஐ-ன் இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் சம்பவம் குறித்து உடனடி விசாரணை மேற்கொண்டார். மேலும், தேசியக்கொடியைக் குப்பைத் தொட்டியில் போட முயற்சி செய்த உதவி ஆய்வாளர் நாகராஜன், காவல் கட்டுப்பாட்டு அறைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும், அவர்மீது துறைரீதியான விசாரணையும் நடைபெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.