காங்., பிரமுகர் கொலையில் 6 பேர் கைது போலீஸ் துப்பாக்கி சூட்டில் இருவர் காயம்| 6 people arrested in the murder of a Congress figure, two injured in police firing

சீனிவாசப்பூர் : கோலார் ஜில்லா பஞ்சாயத்து காங்கிரசின் முன்னாள் தலைவர் சீனிவாஸ் கொலையில் தொடர்புடைய ஆறு பேரை, நேற்று போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், அவர்களில் இருவரது காலில் குண்டு பாய்ந்தது.

கோலார் ஜில்லா பஞ்சாயத்து காங்கிரசின் முன்னாள் தலைவர் சீனிவாஸ், 62. இவர், நேற்று முன்தினம் முல்பாகல் சாலையில், தான் புதிதாக கட்டி வரும், ‘பார் அண்ட் டெஸ்டாரென்ட்’ கட்டடத்தை பார்வையிட சென்ற போது, மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர், சீனிவாஸ் முகத்தில், ‘பெப்பர் ஸ்ப்ரே’ தெளித்து பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பினர்.

முன்விரோதத்தால் நடந்த கொலை என்பது, போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் கோலார் மாவட்டம், வேம்கல் லட்சுமி சாகர் என்ற இடத்தில் கொலையாளிகள் ஆறு பேர் ஒரே இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. அந்த இடத்திற்கு வேம்கல் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையில் போலீசார் சென்றனர்.

அவர்களை பிடிக்க முயன்ற போது இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், போலீஸ்காரர்கள் மஞ்சுநாத், நாகேஷ் ஆகியோரை கத்தியால் குத்திவிட்டு ஆறு பேரும் தப்பிக்க முயன்றனர். ஓடாமல் சரண் அடையுமாறு போலீசார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தனர். ஆனால், அவர்கள் பணியவில்லை.

இதனால், இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் துப்பாக்கியால் சுட்டார். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட வேணுகோபால், 32, மற்றும் முனிந்திரா, 28, ஆகிய இருவருக்கும் காலில் குண்டு பாய்ந்தது. சந்தோஷ், 26, என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கொலையாளிகளால் தாக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், போலீசார் சதீஷ், நாகேஷ் ஆகிய மூன்று பேரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், மூன்று கொலையாளிகளான நாகேந்திரா, 24, ஹர்ஷத், 23, கவுதம், 22, ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

எஸ்.பி., நாராயணா கூறுகையில், ”கொலையான சீனிவாசுக்கும், கைது செய்யப்பட்டுள்ள வேணுகோபாலுக்கும் ஏற்கனவே நான்கு, ஐந்து ஆண்டுகளாக தகராறு இருந்துள்ளது. போலீஸ் நிலையத்தில் வழக்கும் உள்ளது.

”வேணுகோபாலின் எதிர் கோஷ்டிக்கு ஆதரவாக நடந்த கொலை வழக்கு ஒன்றில், சீனிவாஸ் ஆதரவாக செயல்பட்டதால் இந்த கொலை நடந்திருக்கலாம் என தெரிகிறது. தொடர்ந்து, விசாரணை நடக்கிறது,” என்றார்.

� போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் காலில் குண்டு பாய்ந்த வேணுகோபால், முனிந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். � காயம் அடைந்த போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இடம்: சீனிவாசப்பூர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.