தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் நேற்று நள்ளிரவு சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா, கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலில் தினமும் இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறுதிருக்கோலங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று நள்ளிரவு குலசேகரன்பட்டினம் கடற்கரையில் நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் மாலையில் இருந்தே பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள்குலசேகரன்பட்டினம் நோக்கி வரத்தொடங்கினர்.
நேற்று காலை கோயிலில் அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில்முன்பாக எழுந்தருளிய அம்மன், பல்வேறு வேடங்களில் வந்த மகிசாசூரனை வதம் செய்தார். அப்போது கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘தாயே முத்தாரம்மா’, ‘ஓம் காளி.. ஜெய்காளி’ என விண்ணதிர முழக்கமிட்டனர்.
தொடர்ந்து கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரர் கோயில், அபிஷேக மேடை மற்றும் கோயில் கலையரங்கில் எழுந்தருளிய அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தசரா குழுவினர் விடியவிடிய கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.
இன்று (அக்.25) காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதியுலா புறப்படுகிறார். மாலை 4 மணிக்கு அம்மன் கோயிலை வந்தடைந்தவுடன் பக்தர்கள் காப்புஅவிழ்த்து, வேடங்களைக் களைந்து விரதத்தை நிறைவு செய்கின்றனர். இன்று நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.
இவ்விழாவை முன்னிட்டு, காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் தலைமையில், 5 ஏடிஎஸ்பிக்கள், 20 டிஎஸ்பிக்கள், 68ஆய்வாளர்கள் உட்பட 2, 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்து குலசேகரன்பட்டினத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.