`மாநகரம் டு லியோ' – லோகேஷ் கனகராஜ் படங்களில் இத்தனை `கமல்' குறியீடுகளா? ஒரு சுவாரஸ்ய அலசல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் `லியோ’ திரைப்படம் வெளியாகி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இந்த இமாலய வெற்றிக்குப் பின்னால் லோகேஷின் அபரிமிதமான உழைப்பு அடங்கியிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ்

இந்த உழைப்புக்கெல்லாம் மூல காரணமானவர் நடிகர் கமல்ஹாசன்தான். ஆம், கமல்ஹாசன் மீதான தீராத ரசனைதான் லோகேஷ் கனகராஜை சினிமாவின் பக்கம் அழைத்து வந்திருக்கிறது. கமல்ஹாசனின் படங்களைப் பார்த்து அவர் படங்களிலிருந்து பலவற்றைக் கற்றுக் கொண்டு பல அற்புதங்களைத் திரையில் நிகழ்த்தியிருக்கிறார் லோகேஷ். அதுமட்டுமின்றி தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் கமல்ஹாசன் படங்களின் ரெஃபரென்ஸை (குறியீடுகள்) ஆங்காங்கே வைத்திருப்பார். அந்த ரெஃபரென்ஸ் பாணியைத் தனது ஐந்து திரைப்படங்களிலும் தொடர்ந்திருக்கிறார். அவை என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

மாநகரம்:

மாநகரம் திரைப்படத்தின் சந்தீப் கிஷன் கதாபாத்திரத்தை வடிவமைப்பதற்கு ‘சத்யா’ திரைப்படத்தின் கமலின் கதாபாத்திரம்தான் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறது. ‘சத்யா’ திரைப்படத்தின் கமலின் தோற்றத்தைப் போன்ற வடிவில்தான் சந்தீப் கிஷன் கதாபாத்திரத்தின் தோற்றமும் அமைந்திருக்கும். ‘சத்யா’ திரைப்படத்தில் கமலின் கதாபாத்திரத்தை வேலை தேடி அலைபவராகவும், தன் கண்களுக்கு முன்னால் நிகழும் ஒழுக்க சீரில்லாத நிகழ்வுகளுக்குக் கோபப்படுபவராகவும் காட்டியிருப்பார்கள்.

மாநகரம்

அதேபோல்தான் ‘மாநகரம்’ திரைப்படத்தின் சந்தீப் கிஷன் கதாபாத்திரமும் அமைந்திருக்கும். இதுமட்டுமின்றி ‘சத்யா’ திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளில் பெரும்பான்மையாக பன்ச் (குத்து) சண்டைகள்தான் இருக்கும். அதைப் பின்பற்றித்தான் ‘மாநகரம்’ திரைப்படத்தின் சந்தீப் கிஷன் கதாபாத்திரம் இடம்பெறும் சண்டைக் காட்சிகளையும் வடிவமைத்திருப்பார்கள். இதெல்லாம்தான் ‘மாநகரம்’ திரைப்படத்திலுள்ள கமல் ரெஃபரென்சஸ்.

கைதி:

‘கைதி’ திரைப்படத்தை எழுதுவதற்கு ஊக்கமாக அமைந்தது கமல் நடித்த ‘விருமாண்டி’ திரைப்படம்தான் என லோகேஷ் கனகராஜ் பல நேர்காணல்களில் கூறியிருக்கிறார். ‘விருமாண்டி’ திரைப்படத்தின் கமலின் லுக் போலவேதான் ‘கைதி’ திரைப்படத்தின் கார்த்தியின் லுக்கும் அமைந்திருக்கும். ‘கைதி’ திரைப்படத்தின் இறுதியில் ‘விருமாண்டி’ திரைப்படத்திற்கு லோகேஷ் கிரெடிட்ஸ் கொடுத்திருப்பார்.

கைதி

இதுபோக, ரசிகர்கள் இத்திரைப்படத்தை ‘குருதிப்புனல்’ திரைப்படத்துடன் ஒப்பிட்டும் சில பதிவுகளைப் பதிவிட்டனர். ‘கைதி’ நரேன் கதாபாத்திரத்தை ‘குருதிப்புனல்’ கமல் கதாபாத்திரத்துடனும், அத்திரைப்படத்தில் கமலுக்குத் துப்பு கொடுக்கும் ஒருவரின் கதாபாத்திரத்தை ‘கைதி’ திரைப்படத்தில் நரேனுக்குத் துப்பு கொடுக்கும் கண்ணா ரவி கதாபாத்திரத்துடனும், நாசர் கதாபாத்திரத்தை ‘கைதி’ திரைப்படத்தில் வரும் ஹரிஷ் உத்தமன் கதாபாத்திரத்துடனும் ஒப்பிட்டுப் பதிவிட்டனர்.

மாஸ்டர்:

‘மாஸ்டர்’ திரைப்படம் ‘நம்மவர்’ திரைப்படத்தின் தொடர்ச்சி என்றே கூறலாம். ‘நம்மவர்’ திரைப்படத்தின் செல்வம் (கமல்) கதாபாத்திரத்தின் மாணவர்தான் ஜே.டி என்பதைக் குறியீடாக உணர்த்தும் வகையில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் ஒரு வசனம் அமைந்திருக்கும். மேலும் ‘சத்யா’ திரைப்படத்தில் கமல் தனது கையில் காப்பு அணிந்திருப்பார். அதை வைத்து ஒரு சண்டைக் காட்சியும் இருக்கும். அதே போல் ஒரு சண்டைக் காட்சி ‘மாஸ்டர்’ திரைப்படத்திலும் இடம்பெற்றிருக்கும்.

Vijay, Master

லோகேஷ் கனகராஜின் அனைத்து திரைப்படங்களிலும் இந்த கை காப்பு ஒரு முக்கியமான உயிரற்ற கதாபாத்திரமாகப் பயணிக்கும். ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ரிலீஸுக்குப் பிறகு அத்திரைப்படத்தின் டெலீட்டட் காட்சிகள் வெளியானது. அதில் ‘குட் டச்’, ‘பேட் டச்’ குறித்தான வசனம் இடம்பெற்றிருக்கும். இது அப்போதே ‘நம்மவர்’ திரைப்படத்திலும் இருக்கும்.

விக்ரம்:

இதுவரை தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் கமல்ஹாசன் திரைப்படங்களின் ரெஃபரென்ஸை வைத்த லோகேஷ் கனகராஜ், முதன்முறையாகத் தனது நாயகனையே வைத்து ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கினார். ‘ஃபேன்பாய்’ படமாக அத்திரைப்படத்தை உருவாக்கி மாபெரும் வெற்றியைத் தொடச் செய்தார். 2022-ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம், 1986-ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தின் தொடர்ச்சிதான். அதே ஏஜெண்ட் விக்ரமாகத்தான் லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ திரைப்படத்திலும் நடித்திருப்பார் கமல்.

‘விக்ரம்’ கமல்

1986-ம் ஆண்டு வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தின் இசையை ரீ-வொர்க் செய்து 2022-ம் ஆண்டு வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்திலும் ஒரு பின்னணி இசையைக் கோர்த்திருந்தனர். மேலும், ‘விக்ரம்’ திரைப்படத்தில் ‘கோட் ரெட்’ என்கிற குறியீடு வார்த்தையை லோகேஷ் வைத்திருந்தார். இந்த வார்த்தையை ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் கமல் குறியீடு வார்த்தையாகப் பயன்படுத்த பூஜா குமாரிடம் கூறுவார்.

லியோ:

‘லியோ’ திரைப்படத்திலும் சில கமல் திரைப்படங்களின் ரெஃபரென்ஸை லோகேஷ் வைத்திருக்கிறார். அதில் விஜய் ஒரு கழுதைப் புலியைத் தத்தெடுத்து வளர்ப்பார். அந்த கழுதைப் புலிக்கு (ஹைனா) ‘சுப்ரமணி’ எனப் பெயர் வைப்பார். ‘மூன்றாம் பிறை’ திரைப்படத்தில் ஶ்ரீ தேவி ஒரு நாயை எடுத்து வளர்ப்பார். அந்த நாய்க்கு சுப்ரமணி எனப் பெயர் வைத்திருப்பார்கள். இதை ஒப்பிட்டுப் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அது மட்டுமின்றி ‘நம்மவர்’ திரைப்படத்தில் கமல், “ஓங்கி விட்டா கன்னத்துல… சைடுல இருந்து பாத்தாலும் சிரிக்கிற மாதிரி இருக்கும்” என ஒரு வசனம் பேசியிருப்பார். இதே பன்ச் வசனம் சற்றே மாறி, ‘லியோ’ திரைப்படத்தில் விஜய் பேசுவதாக இடம்பெற்றிருக்கிறது.

LEO

இதைத் தவிர, LCU என்கிற லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸுக்குள் ‘லியோ’ படம் வருவதால் கமல் இத்திரைப்படத்தில் குரல் கொடுத்திருக்கிறார். இந்தப் பின்னணி குரல் மூலமாக கமல் ‘யாரென்று தெரிகிறதா?’ என்று பன்ச் பேசுவார். இந்த ஒற்றை வசனம் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் வரும் பாடல் வரியாகும்.

இவையெல்லாம்தான் லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் அமைந்துள்ள கமல்ஹாசன் ரெஃபரென்சஸ். இவற்றைத் தவிர அவரது படங்களில் இடம்பெற்றுள்ள பிற குறியீடுகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.