சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள ஹாமூன் புயல் இன்று மாலை வங்கதேசத்தில் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 23-ம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அன்று மாலை 5.30 மணி அளவில் ஹாமூன் புயலாக வலுப்பெற்றது. அந்த புயல் நேற்று (அக்.24) அதிகாலை 2.30 மணி அளவில் தீவிர புயலாகவடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. காலை 8.30 மணிஅளவில் மேலும் வலுப்பெற்று, வடமேற்கு மற்றும் அதை ஒட்டியவடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மிக தீவிர புயலாக நிலவியது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவிழந்து, வங்கதேச கரையை கெபுபரா – சிட்டகாங் இடையே இன்று (அக்.25) மாலை கடக்கக்கூடும்.
இதேபோல, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் 23-ம்தேதி நிலவிய மிக தீவிர ‘தேஜ்’ புயல் நேற்று அதிகாலை 3 மணி அளவில் தெற்கு அல்கைடா அருகேஏமன் கடற்கரையை கடந்தது.
தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, பாம்பன், தூத்துக்குடி, குளச்சல், நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, காட்டுப்பள்ளி, சென்னை, எண்ணூர், காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.