இலங்கை விமானப்படை லாபுகஸ்தமன வனப்பகுதியில் விதை குண்டுகளை வீசியது

இலங்கை விமானப்படை (SLAF) தனது விதை குண்டுவீச்சு திட்டத்தின் 8 வது கட்டத்தின் கீழ் 50 ஏக்கர் வனப்பகுதியில் 80,000 விதை குண்டுகளை வீசியது. கடந்த இருநாட்களில் (அக். 30 & 31) அனுராதபுரத்தில் உள்ள லாபுகஸ்தமன வனப் பகுதியில் இந்த விதை குண்டுகள் விமானப்படையின் MI – 17 ஹெலிகாப்டர் ஒன்றின் மூலம் வீசப்பட்டது.

நாட்டிலுள்ள வன அடர்த்தியை அதிகரிக்கும் நோக்குடன், இலங்கை விமானப்படை, பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மாஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது என விமானப்படை ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த விதை குண்டுகள் பூக்கம் (Schleicher oleosa), வேம்பு (Azadirachta indica), ஆத்தி (Bauhinia racemose), நாவல் (Syzygium cumini), புளி (Tamarindus indica), இலுப்பை (Madhuca longifolia), பாலை (Manilkara) வெண் மருது (டெர்மினாலியா அர்ஜுனா), மகோகனி (ஸ்வீடெனியா மேக்ரோஃபில்லா), தான்றி (டெர்மினாலியா பெலரிகா), கித்துல் (காரியோட்டா யூரென்ஸ்), மகிழம் (மிமுசோப்ஸ் எலங்கி), புங்கை (மில்லட்டியா பின்னடா) மற்றும் முள்வேங்கை (பிரிடிலியா ரெடுசா) போன்ற நாட்டு மரங்களின் விதைகளை உள்ளடக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தின் முதல் கட்டத்தின் போது ரானோராவை காட்டில் 5 ஏக்கர் பரப்பளவில் 5,000 விதை குண்டுகள் வீசப்பட்டன. அதணைத் தொடர்ந்து வந்த கட்டங்களில் வீசப்பட்ட விதை குண்டுகளின் தொகை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 7ஆம் கட்டத்தில் கெபிலித்த வத்தேகம காட்டில் 80 ஏக்கர் நிலப்பரப்பில் 100,000 விதை குண்டுகள் வீசப்பட்டன.

இவ்விதை குண்டுவீச்சு பெரும்பாலும் வான்வழியாக மட்டும் அணுகக்கூடிய வனப் பிரதேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் முக்கியமாக பருவமழை காலங்களில் மேட்கொள்ளப்படும் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.