நடிகர் டி.எஸ் பாலையாவின் மகனான ஜூனியர் பாலையா இன்று காலை காலமானார்.
இவருக்கு வயது 70. கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, சுந்தர காண்டம், அமராவதி ஆகிய திரைப்படங்களில் நடித்து மக்களிடையே பரிச்சயமான நடிகர் ஜுனியர் பாலையா இன்று காலை சென்னை வளசரவாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
புகழ்பெற்ற நடிகர் டி.எஸ் பாலையாவின் மூன்றாவது மகன் இவர். இவரின் இயற்பெயர் ரகு பாலையா. திரையுலகத்திற்கு அறிமுகமானதும் இவரை பலர் ஜூனியர் பாலையா என அழைக்கத் தொடங்கினர். இவர் 40 வருடங்களாக தமிழ் சினிமாவில் அதிகளவில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதுமட்டுமின்றி தொலைகாட்சி சீரியல்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

2007 ஆம் ஆண்டு வரை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த இவர் சிறிய இடைவெளிக்குப் பிறகு 2012 ஆம் ஆண்டு சமுத்திரகனி இயக்கத்தில் வெளியான ‘சாட்டை’ திரைப்படத்தில் நடித்து கவனிக்கப் பெற்றார். அதனைத் தொடர்ந்து ‘கும்கி’, ‘தனி ஒருவன்’, ‘புலி’ ஆகியத் திரைபடங்களிலும் நடித்தார்.
வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வசித்து வந்த இவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இன்று காலை காலமானார். கடந்த சில நாட்களாகவே உடல் நிலை சீராக இல்லாத காரணத்தினால் இவர் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இவரின் உடல் சென்னை வளசரவாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.