பாகிஸ்தான் – நியூசிலாந்து இடையேயான ஆட்டம் மழையால் பாதிப்பு

பெங்களூர்,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்துவரும் நிலையில், இன்று நடைபெறும் முக்கிய ஆட்டத்தில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அரையிறுதிக்கு முன்னேற இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நெருக்கடியில் இரு அணிகளும் உள்ளன. இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. அதைப்போலவே ஆட்டமும் அமைந்தது.

குறிப்பாக நியூசிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் பந்து வீச்சை சிதறடித்தனர். பாகிஸ்தான் அணியின் முன்னணி பந்து வீச்சாளரான ஷாகின் அப்ரிடி பந்து வீச்சும் எடுபடவில்லை. ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 402 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தொடங்கியது.

பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியாக விளங்கும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் பாகிஸ்தான் அணியும் வானவேடிக்கை காட்டியது. இமாலய இலக்கு என்பதால் துவக்கம் முதலே அதிரடியாக பாகிஸ்தான் வீரர்கள் விளையாடினர். 21.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் அணி 160 ரன்கள் எடுத்து இருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.