சென்னை: தமிழகம் முழுவதும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் 2-வதுவாரமாக 1,000 இடங்களில் நடைபெற்றது. இந்த ஆண்டில் இதுவரை 3.13 லட்சம் டெங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகவே காணப்படுகிறது.
எனவே, டெங்கு உள்ளிட்ட நோய்களுக்காக தமிழகம் முழுவதும் டிசம்பர் மாதம் வரை 10 வாரங்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 1,000 சிறப்பு மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த தமிழக சுகாதாரத் துறை முடிவு செய்தது.
முதல் வாரமான கடந்த மாதம் 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திட்டமிட்டதைவிட அதிகமாக 1,943இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாமில் 1,04,876 பேர் பயனடைந்துள்ளனர்.
இதற்கிடையே, மருத்துவ முகாம்களை சனிக்கிழமைகளில் நடத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை வைத்தனர். இதையேற்று, இனிவரும் வாரங்களில் சனிக்கிழமைகளில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
அதன்படி, 2-வது வாரமாக நேற்று தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. சென்னை, அடையாறு, மல்லிப்பூ நகர் பகுதியில் நடைபெற்ற முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு, சளி தொல்லை உள்ளவர்கள், வறண்ட தொண்டை இருமல், சேற்றுப்புண் போன்ற பல்வேறு மழைக்கால உபாதைகள் உள்ளவர்கள் இந்த மருத்துவ முகாம்களை அணுகி பயன் பெறலாம். மேலும்,பள்ளி சிறார்களுக்கான 805 மருத்துவ குழுக்கள் மூலம் பள்ளிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் இந்த ஆண்டில் இதுவரை 3,13,648பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 6,169 பேர்டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 598 பேர் வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 26,721 பேர் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போதுமான அளவுக்கு மருந்தும் கையிருப்பில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டிருக்கிறது. ஜிகா வைரஸ் என்பது, டெங்கு உருவாக்கும் ஏடிஸ் கொசுக்களின் மூலமே பரவக்கூடிய ஒரு வகை வைரஸ் காய்ச்சல் ஆகும். உலகம் முழுவதும் 22 நாடுகளில் ஜிகா வைரஸ் பரவத் தொடங்கியிருக்கிறது.
காய்ச்சல், தலைவலி, உடல்வலி, சிவப்பு தடிப்புகள் போன்ற அறிகுறிகள் இருந்தால் மக்கள் சுய மருத்துவத்தை தவிர்த்து, மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். ஜிகா வைரஸ் காய்ச்சல் 2 முதல் 7 நாட்களுக்குள் குணமாகிவிடும். இதில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு குறைவுதான். தமிழகத்தில் ஜிகா பரவல் இல்லை என்பது ஆய்வுகள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனவே, மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.