தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்வேல். இவரது குடும்பத்தில் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், “நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். குளிர்பானத்தில் களைக்கொல்லி மருந்தை கலக்கி குடிக்கப் போகிறேன்” எனப் பேசி, குளிர்பானத்துடன் களைக்கொல்லி மருந்தைக் கலக்கி, தான் குடிப்பதை செந்தில்வேல் வீடியோ பதிவுசெய்திருக்கிறார். பின்னர், அந்த வீடியோவை சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார்.

மேலும் அதே வீடியோவை அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரது எண்ணுக்கும் அனுப்பி வைத்துள்ளார். செந்தில்வேல் அந்த வீடியோவில், தனது தற்கொலைக்கு குடும்ப உறுப்பினர்கள் மூவர்தான் காரணம் எனக் கூறி, அவர்களின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் முத்து தலைமையிலான போலீஸார், செந்தில்வேலின் செல்போன் சிக்னல் மூலம் அவர் எந்த பகுதியில் உள்ளார் என நேற்று காலை முதல் நள்ளிரவு வரை தீவிரமாக தேடினர். ஆனாலும் கடும் மழை காரணமாக, செந்தில்வேலை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. செந்தில்வேலின் உறவினர்களும் அவரை தேடினர். இந்த நிலையில், இன்று அதிகாலை சாத்தான்குளம் அருகேயுள்ள கரையடிகுளம் பகுதியிலிருந்து 2 கி.மீ., தூரத்தில் செந்தில்வேலின் உடல் கிடந்துள்ளது.

உடலின் அருகில் அவரது இருசக்கர வாகனம் வாய்க்கால் கரையோரத்தில் இருப்பதை உறவினர்கள் கண்டறிந்ததுடன், சாத்தான்குளம் போலீஸாருக்கு தகவல் கூறினர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், செந்தில்வேலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், அவரது இறப்புக்கான காரணம் என்ன… அவர் வீடியோவில் கூறியிருக்கும் தகவல்கள் குறித்தும் அவரின் உறவினர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.