கோல்கட்டா :உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இன்று இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் கோலி சதம் விளாசினால், சச்சின் சாதனையை சமன் செய்யலாம்.
இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் நடக்கிறது. கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (நவ., 05) நடக்கும் லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடத்தில் உள்ள இந்தியா (14 புள்ளி), தென் ஆப்ரிக்க (12) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இத்தொடரில் 7 போட்டியிலும் வெற்றி பெற்று ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா, இன்றும் வென்றால் 16 புள்ளியுடன் பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்யலாம்.
பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா (402 ரன்) பெரிதும் நம்பிக்கை தருகிறார். சுப்மன் கில் (16, 53, 26, 9, 92) கடந்த முறை 92 ரன் விளாசியது நம்பிக்கை தருகிறது.
‘சீனியர்’ கோலி (494, 1 சதம்) நல்ல பார்மில் உள்ளார். இன்று 35 வது பிறந்த நாள் கொண்டாடும் இவர், ஒருநாள் அரங்கில் 49வது சதம் விளாச முயற்சிக்கலாம்.
இதன் மூலம் இந்திய ஜாம்பவான் சச்சின் சாதனையை(49 சதம்) சமன் செய்யலாம்.
ஸ்ரேயாஸ் (216) ‘ஷார்ட் பிட்ச்’ பந்துகளை நன்றாக சமாளிக்க வேண்டும். லோகேஷ் ராகுல் (237) 19, 34, 27, 39, 21 என குறைந்த ஸ்கோர் மட்டும் எடுப்பது ஏமாற்றம் தருகிறது. சூர்யகுமார் மீண்டும் பொறுப்பாக விளையாட வேண்டும்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா (15), முகமது சிராஜ் (9) நம்பிக்கை தருகின்றனர். இவர்கள் முதல் ‘பவர் பிளேயில்’ மட்டும் 10 (தலா 5) விக்கெட் சாய்த்தனர். இன்றும் இது தொடர்ந்தால் வெற்றிக்கு உதவியாக இருக்கும்.
அடுத்து வரும் முகமது ஷமி (3 போட்டி, 14 விக்.,) டெஸ்ட் போட்டி போல ரன்னை கட்டுப்படுத்தி (சராசரி 6.71 ரன்) சரியான ‘லென்த்தில்’ வீசி மிரட்டுகிறார். சுழலில் குல்தீப் யாதவ் (10), ஜடேஜா (9) கூட்டணி நம்பிக்கை தரலாம்.
தென் ஆப்ரிக்க அணி 7 போட்டியில் (6 வெற்றி) 12 புள்ளி பெற்று இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. துவக்கத்தில் மெதுவான ரன் குவிப்பை தரும் தென் ஆப்ரிக்கா, போகப் போக, வேகம் எடுக்கிறது. இத்தொடரில் முதலில் பேட் செய்த 5 போட்டியிலும் (428, 311, 399, 382, 357) 300 ரன்னுக்கும் மேல் குவித்தது.
‘சேஸ்’ செய்த இரு போட்டியில் (207, 271) தடுமாறியது. பேட்டிங்கில் அதிக ரன் குவித்த குயின்டன் டி காக் (545 ரன், 4 சதம்), வான் டெர் துசென் (353, 2) இதுவரை 6 சதம் அடித்தனர். ‘மிடில் ஆர்டரில்’ மார்க்ரம் (362), கிளாசன் (315), மில்லர் (220), வேகப்பந்து வீச்சாளர் ஜான்செனும் (143) ரன் குவிப்பில் ஈடுபடுகின்றனர். கேப்டன் பவுமா (111) மட்டும் ஏமாற்றம் தருகிறார்.
பவுலிங்கில் ஜான்சென் (16), ரபாடா (11) கூட்டணி ‘வேகத்தில்’ மிரட்டுகிறது. 7 போட்டியில் முதல் 10 ஓவரில் எதிரணியின் 18 விக்கெட்டுகளை சாய்த்துள்ளனர். அடுத்து வரும் கோயட்சீ (14), தனது முதல் 15 பந்துகளில் எப்படியும் ஒரு விக்கெட் சாய்த்து விடுகிறார். சுழலில் கேஷவ் மஹாராஜ் (11), ஷம்சி (6) கைகொடுக்கலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்