சேலத்தில் பிரபல நட்சத்திர ஹோட்டலில், `எம்.எஸ்.எம்.இ புரொமோஷன் கவுன்சில்’ என்ற அமைப்பின் சார்பில், சிறு, குறு தொழில் செய்வதற்கு மத்திய அரசிடமிருந்து கடன் பெற்றுத் தரப்படுவதாகக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதில், அந்த அமைப்பின் தேசியத் தலைவரான மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துராமன், செயலாளரான பஞ்சாப்பைச் சேர்ந்த துஷ்யந்த் யாதவ், தமிழ்நாடு சேர்மன் சௌத்ரி ஆகியோர் கலந்துகொண்டனர். சௌத்ரி, நடிகை நமீதாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அமைப்பின் தலைவர் முத்துராமன், அரசு சின்னத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும், ஏமாற்று வேலையில் ஈடுபட்டிருப்பதாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக சூரமங்கலம் போலீஸார் முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, சேலம் ஜாகிர் அம்மாபாளையம் இரண்டாவது சன்னதித் தெருவைச் சேர்ந்த ஃபைனான்ஸியர் கோபால்சாமி என்பவர், சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், “சேலத்திலுள்ள மகளிர் சுய உதவிக்குழுவுக்குக் கடன் கொடுத்து, வசூல் செய்யும் தொழில் செய்துவருகிறேன். எனக்கு மதுரை வக்பு போர்டு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிவரும் மூசா முபாரக் என்பவரின் அறிமுகம் கிடைத்தது.

அவர் மதுரையைச் சேர்ந்த முத்துராமன் என்பவரை, எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். முத்துராமன் `எம்.எஸ்.எம்.இ நேஷனல் புரொமோஷன் கவுன்சில்’ சேர்மனாக இருப்பதாகக் கூறினார். அப்போது அவரது காரில் தேசியக்கொடியும், அசோக முத்திரையும் இருந்தன, எம்.எஸ்.எம்.இ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரது விசிட்டிங் கார்டிலும் அசோக முத்திரை பதித்து, `டாக்டர் முத்துராமன், எம்.எஸ்.எம்.இ நேஷனல் புரொமோஷன் கவுன்சில் சேர்மன், இந்தியா’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் அவர் மத்திய அரசின் முக்கியப் பதவியில் இருப்பதாகக் கருதினேன், முத்துராமனையும் சந்தித்துப் பேசினேன். இதற்கிடையில் கடந்த ஜூன் மாதம், சென்னையில் எம்.எஸ்.எம்.இ புரொமோஷன் கவுன்சில் நிகழ்ச்சி நடப்பதாகவும், அதற்கு தொழில்முனைவோரை அழைத்து வருமாறும் கூறினார். இதையடுத்து சேலத்திலிருந்து 25 பேரை சென்னைக்கு அழைத்துச் சென்றேன். எனக்கு தமிழ்நாடு கவுன்சில் சேர்மன் பதவி வாங்கித்தருவதாகவும், அதற்கு 3 கோடி ரூபாய் வேண்டும் என்றும் கேட்டார். பின்னர், 50 லட்சம் ரூபாய் கேட்டார். கடந்த ஜூலை மாதம் சேலத்துக்கு வந்துகொண்டிருப்பதாகவும், ரூ.50 லட்சத்தை திருவாக்கவுண்டனூர் பகுதிக்குக் கொண்டுவருமாறும் கூறினார். அப்போது என்னிடமிருந்த ரூ.31 லட்சத்தைக் கொடுத்தேன். அதை வாங்கிய முத்துராமன், அருகிலிருந்த துஷ்யந்த் யாதவிடம் கொடுத்தார்.

`மீதமுள்ள பணத்தை எவ்வளவு சீக்கிரம் கொடுக்கிறீர்களோ… அவ்வளவு சீக்கிரம் சேர்மன் பதவியைப் பெறலாம்’ என ஆசைவார்த்தை கூறினார். இதனால் எனது வங்கிக் கணக்கிலிருந்து முத்துராமன் கொடுத்த ஐந்து வங்கிக் கணக்குகளுக்கு ரூ.19 லட்சத்தை அனுப்பிவைத்தேன். மொத்தம் ரூ.50 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு, பதவி வழங்காமல் காலம் கடத்திவந்தார். பின்னர் நடிகை நமீதாவின் கணவர் சௌத்ரியிடம் ரூ.4 கோடியைப் பெற்றுக்கொண்டு, தமிழக சேர்மன் பதவியை அவருக்குக் கொடுத்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனால், நான் கொடுத்த ரூபாய் 50 லட்சத்தைத் திரும்பத் தருமாறு கேட்டேன். ஆனால், ரூ.9 லட்சம் மட்டுமே கொடுத்தார்கள், மீதமுள்ள ரூ.41 லட்சத்தைத் தராமல் ஏமாற்றிவிட்டனர். எனவே, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோர்மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து, போலீஸார் அவர்களைக் கைதுசெய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், இந்த மோசடி விவகாரம் தொடர்பாக சூரமங்கலம் போலீஸாரிடம் மேலும் பலர் புகாரளித்திருக்கின்றனர்.

தொடர் புகார்கள் குவியவே… முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகிய இருவரையும் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவுசெய்த போலீஸார், இருவரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதியிடம் போலீஸ் காவல் கேட்டனர். அதன்பேரில், நீதிபதியும் இருவரையும் இரண்டு நாள்கள் போலீஸ் காவலில்வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.