மேற்கு ஆசிய கடல் பகுதியில் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்… அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்,

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு சிறை பிடித்து சென்ற பணய கைதிகளை மீட்கும் முயற்சியையும் இஸ்ரேல் தொடர்ந்து வருகிறது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது. இந்நிலையில், மேற்கு ஆசிய கடல் பகுதியில் அமெரிக்காவின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஒன்று நுழைந்துள்ளது. இதனை அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தி உள்ளது.

இதுபற்றி சி.என்.என். வெளியிட்டுள்ள செய்தியில், ஈரான் மற்றும் அதன் கூட்டணியில் உள்ள எதிர்ப்பு நாடுகளுக்கு அச்சுறுத்தலை வெளிப்படுத்தும் செய்தியாக இது அமையும்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரால், மோதல் விரிவடைந்து செல்லாமல் தவிர்க்கும் முயற்சியில் பைடன் அரசு நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்த அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் வந்துள்ளது.

இதன்படி, கெய்ரோ நகருக்கு வடகிழக்கே அல் சலாம் பாலத்தின் கீழ் சூயஸ் கால்வாயில் கப்பல் வந்துள்ளது. அந்த பகுதியில், 2 விமானந்தாங்கி கப்பல்களுடன், படையினர் முன்பே தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுடன் இந்த கப்பல் இணைந்துள்ளது.

அமெரிக்க கப்பல் படையில், இதுபோன்று 4 கப்பல்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அதிக திறன் வாய்ந்த, 154 தோமஹாக் ரக ஏவுகணைகளை ஏந்தி செல்ல கூடியது.

ஒவ்வொரு தோமஹாக்கும், ஆயிரம் பவுண்டு எடை கொண்ட, அதிக வெடிக்க கூடிய திறன் பெற்ற ஆயுதங்களை சுமந்து செல்ல கூடியவை. இதனால், அமெரிக்காவின் எந்தவொரு எதிரியும் இந்த அச்சுறுத்தலை புறந்தள்ளி விட முடியாது என அமெரிக்க பசிபிக் பிராந்திய இணை புலனாய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் கார்ல் சூஸ்டர் கூறியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி அந்தோணி பிளிங்கன், மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, அவர் மேற்கு ஆசிய நாடுகளான துருக்கி, ஈராக், இஸ்ரேல், ஜோர்டான், மேற்கு கரை மற்றும் சைப்ரஸ் நாடுகளில் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது, கூட்டணியில் உள்ள அந்நாட்டு தலைவர்களை தொடர்ச்சியாக சந்தித்து பேசியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.