ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஒஎன்ஜிசி-க்கு அனுமதி தரக் கூடாது: இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் கேட்டுள்ள அனுமதியை உடனடியாக திமுக அரசு நிராகரிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்திடம் கேட்டுள்ள அனுமதியை உடனடியாக இந்த திமுக அரசு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் நிலத்தடி நீரும், பெருமளவு விவசாய நிலங்களும் பாதிப்படைவதை முற்றிலுமாக தடுக்கும்‌ பொருட்டு எனது தலைமையிலான கடந்த அதிமுக அரசில் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அத்தகைய நச்சுத் திட்டங்களால் தமிழகம் ஒருபோதும் பாதிப்படையா வண்ணம் முற்றுப்புள்ளி வைத்தேன்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க ஒஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கேட்டிருப்பது ஏற்புடையதல்ல. இன்றைய தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுகவின் முந்தைய ஆட்சியில் துணை முதல்வராக இருந்தபோது மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, படித்துபார்க்காமல் கையெழுத்திட்டுவிட்டேன் என பின்னர் மாற்றிக் கூறிய வரலாறு உண்டு. ஆகவே, கடந்த காலத்தை போல முதல்வர் ஸ்டாலின் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ள கூடாதெனவும், தமிழகத்தின் வளத்தை பாதிக்கின்ற ஒஎன்ஜிசி-யின் இந்த செயலுக்கு துணை போகாமல் ஆரம்ப நிலையிலேயே உடனடியாக அனுமதி மறுக்க வேண்டுமெனவும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு வலியுறுத்துகிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.