SL vs BAN, Angelo Mathews: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் (ICC World Cup 2023) இலங்கை அணி இன்று வங்கதேச அணியுடன் மோதுகிறது. இரு அணிகளும் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், 2025ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதிபெற இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் உள்ளன.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியின் டாஸை வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹாசன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இலங்கை அணி முதல் ஓவரில் குசால் பெரேரா அவுட்டானாலும், பதும் நிசங்கா – குசால் மெண்டிஸ் ஆகியோர் 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதில் நிசங்கா மட்டுமே அதிரடியாக விளையாடினார். மெண்டிஸ் 19 ரன்களில் வெளியேறினார்.
சில ஓவர்களிலேயே நிசங்கா 41 ரன்களில் அவுட்டாக, சதீரா சமரவிக்ரமா – அசலங்கா ஆகியோர் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இந்த ஜோடி 63 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைக்க, அடுத்து களத்திற்கு வந்தார், ஏஞ்சலோ மேத்யூஸ். இவர் களத்திற்கு வந்த உடன் ஹெல்மட் சரியில்லாததால் அதனை மாற்ற தாமதமாக்கி உள்ளார். அவர் அப்போது கார்ட்டு (Guard) எடுக்காமல் இருந்ததால் பேட்டிங் செய்ய நேரம் எடுப்பதாக கூறி ஷகிப் அல் ஹாசன், கள நடுவர் எராஸ்மஸிடம் முறையிட்டுள்ளார்.
விதிப்படி, ஒரு வீரர் அவுட்டான பின்னரோ அல்லது காயத்தால் வெளியேறிய பின்னரோ 2 நிமிடங்கள் நேரம் கொடுக்கப்படும். அது ட்ரிங்க்ஸ் இடைவேளையாக இருந்தால் பிரச்னையில்லை. அப்படி இடைவேளை இல்லாமல் இருந்தால் 2 நிமிடங்களில் பந்தை எதிர்கொள்ள பேட்டர் தயாராகியிருக்க வேண்டும். ஆனால், மேத்யூஸ் 2 நிமிடங்களை தாண்டியும் பந்தை எதிர்கொள்ளாததால் ஷகிப் அல் ஹாசன் முறையிட்டதால் Timed Out முறையில் அவுட் கொடுக்கப்பட்டது.
ஆனால், அவரின் ஹெல்மட் Strip லூசாக இருந்ததை அவர் பந்தை எதிர்கொள்ளும்போதுதான் பார்த்தார் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இதற்கு அவுட் கொடுத்திருக்கக் கூடாது என்பது பலரின் கருத்தாக உள்ளது. இதுகுறித்து தமிழ் வர்ணனையாளரும், மூத்த இந்திய வீரருமான சடகோபன் ரமேஷ் கூறுகையில்,”ஒருவேளை அவருக்கு 2-3 பந்துகளில் தலையில் அடிப்பட்டிருந்தாலும் நடுவர் இதைதான் செய்வார்களா அல்லது ஒரு உலகக் கோப்பை இறுதிப்போட்டியிலும் இவர்கள் இப்படி நடந்துகொள்வார்களா” என கேள்வி எழுப்பினார்.
மேலும், மேத்யூஸ் (Angelo Mathews Timed Out) 2 நிமிடங்களில் ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய வந்துவிட்டார் எனவும் ஹெல்மட் பிரச்னையாக இருந்ததால் தான் அவர் நேரம் எடுத்தார் எனவும் சடகோபன் ரமேஷ் கூறினார். இருப்பினும், அவர் களத்திற்கு வரவே 2 நிமிடங்களுக்கு மேல் எடுத்ததாக மூன்றாவது நடுவர் உறுதிசெய்த பின்னரே அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டதாகவும் கருத்து கூறப்படுகிறது. மேத்யூஸின் இந்த சர்ச்சையான அவுட் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும், கிரிக்கெட் வரலாற்றில் Timed Out முறையில் அவுட்டான முதல் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ்தான்.
கடைசி நேரத்தில் அசலங்கா சதம் அடித்து, தனஞ்செயா டி செல்வாவின் அதிரடியால் இலங்கை அணி 49.3 ஓவர்களில் 279 ரன்களை எடுத்தது. அசலங்கா 108 ரன்களை எடுத்தார். வங்கதேசத்தில் டன்சிம் ஹாசன் ஷாகிப் 3 விக்கெட்டுகளையும், ஷாகிப் அல் ஹாசன். ஷோரிஃபுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.