ரஜினி, த.செ.ஞானவேல் கூட்டணியின் ‘தலைவர் 170’ படப்பிடிப்பு மும்பையைத் தொடர்ந்து சென்னையில் தொடங்குகிறது.
அடுத்தடுத்த லைன் அப்களை வைத்திருக்கிறார் ரஜினி. இப்போது த.செ.ஞானவேல் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. அடுத்து லோகேஷ் கனகராஜின் ‘தலைவர் 171’ படத்திற்கு செல்கிறார். இதனை முடித்துவிட்டு மீண்டும் நெல்சனுடன் இணைகிறார். ‘ஜெயிலர் 2’ உருவாகிறது என்ற பேச்சு இருக்கிறது. இதற்கிடையே ‘தலைவர் 170’ பற்றி விசாரித்தில் கிடைத்த தகவல்கள்..

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் இந்தப் படத்திலும் ஏகப்பட்ட மல்டி ஸ்டார்கள் இருக்கின்றனர். அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் எனப் பலரும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். திருவனந்தபுரத்தில் தொடங்கிய படப்பிடிப்பு பின்னர், நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நடந்தது. அதில் ரஜினி, மஞ்சு வாரியர் காம்பினேஷன்கள் மட்டுமே படமாக்கப்பட்டன. இதனை அடுத்து மும்பையில் அமிதாப் பச்சனின் காம்பினேஷனில் படப்பிடிப்பு நடந்தது. அமிதாப்பின் போர்ஷனை முதலில் சென்னையிலேயே எடுத்துவிட நினைத்தனர். ஆனால், நாம மும்பைக்கே போய் ஷூட் பண்ணிடுவோம் என ரஜினி கேட்டுக்கொண்டதற்காக மும்பை பறந்து வந்தனர் என்கிறார்கள்.
”33 ஆண்டுகளுக்குப் பிறகு, என்னுடைய வழிகாட்டி, ஆளுமை, அமிதாப் பச்சனுடன், என்னுடைய 170வது படத்தில் மீண்டும் பணிபுரிகிறேன். என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது” என ரஜினியும் சிலாகித்திருந்தார். அமிதாப்பின் போர்ஷன் அடுத்து ஒரு ஷெட்யூல் மீதமிருக்கிறது என்கிறார்கள்.

திருவனந்தபுரம், மும்பை படப்பிடிப்பைத் தொடர்ந்து அடுத்து சென்னையில் படப்பிடிப்பு தொடரும் என முன்பே சொல்லியிருந்தோம். சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் அரங்கம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பிரமாண்டமான இரு செட்கள் அங்கே அமைக்கப்பட்டு வருகின்றன. அதனால் மும்பை படப்பிடிப்புக்கு இப்போது சின்ன பிரேக்கில் இருக்கிறது படக்குழு.
சென்னையில் வரும் டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு நடைபெறும் என்கிறார்கள். இந்த ஷெட்யூலில் பகத் பாசில், ராணா ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.