கலபுரகி: கர்நாடக அரசியல் வரலாறு குறித்து பிரதமர் மோடி தெரிந்துகொள்ள வேண்டும் என்று கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனும், கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே, கலபுரகியில் செய்தியாளர்களிடம் கூறியது: “கர்நாடக முதல்வர் சித்தராமையா எவ்வளவு காலம் பதவியில் நீடிப்பார் என உறுதியாக சொல்ல முடியாது என பிரதமர் மோடி கூறியதாக கேள்விப்பட்டேன். பிரமதர் மோடி கர்நாடக அரசியல் வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும். கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தபோது 8 ஆண்டுகளில் 5 முதல்வர்களைக் கொடுத்த கட்சி பாஜக.
கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த பாஜகவை மக்கள் தூக்கி எரிந்துவிட்டார்கள். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு 136 எம்எல்ஏக்களை மக்கள் தந்திருக்கிறார்கள். கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த பாஜக அரசு, மிக மோசமான ஊழல் அரசு. அந்த அரசை பத்திரிகைகள் 40 சதவீத ஊழல் அரசு என கூறின. கர்நாடகாவில் பாஜகவுக்கு இருக்கும் ‘பெருமை’ அது. காங்கிரஸ் கட்சி பொது விவாதத்துக்குத் தயார். ஆனால், அதற்கு முன் கர்நாடகாவின் அரசியல் வரலாறு குறித்து பிரதமர் மோடி தெரிந்துகொள்ள வேண்டும். எப்போதும் போல அவர் மட்டுமே பேசிக்கொண்டிருக்க முடியாது. விவாதத்துக்கு அவர் தயார் என்றால், நாங்களும் தயார்.
சித்தராமையாவின் பதவிக் காலம் குறித்து பிரதமர் மோடி கேள்வி எழுப்புகிறார். அதை ஏன் பிரதமர் தெரிந்து கொள்ள வேண்டும். அது எங்கள் உள்கட்சி விவகாரம். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி மிகுந்த வலிமையோடு உள்ளது. மத்தியில் உள்ள பாஜக அரசு பொருளாதார ரீதியில் தோல்வி அடைந்துவிட்டது. ஐந்து மாநில தேர்தல்களிலும் நாங்கள் முழு வெற்றி பெறுவோம்” என்று பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
பின்னணி: கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவுக்கும் துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதையடுத்து, காங்கிரஸ் தலைமை தலையிட்டு, சித்தராமைய்யாவை முதல்வராக அறிவித்தது. எனினும், அவர் 5 ஆண்டுகள் இருக்க மாட்டார் என்றும், அவர் மாற்றப்படுவார் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. காங்கிரஸ் தலைமை கேட்டுக்கொண்டால் முதல்வர் பதவியை ஏற்கத் தயார் என்று பிரியங்க் கார்கேவும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.