ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வும் காங்கிரஸும் தீவிர பிரசாரம் மேற்கொண்டுவருகின்றன. இதில், வேலைவாய்ப்பின்மை, ஊழல், விலைவாசி உயர்வு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை பா.ஜ.க-மீது காங்கிரஸ் முன்வைத்துவருகிறது. இவற்றுக்கெதிராக,` ஊழல் என்றாலே காங்கிரஸ்தான்’ என்றும், தங்கள் ஆட்சியில் ஊழலே நடைபெறவில்லை என்றும் சமீபத்தில் வெளியான சி.ஏ.ஜி அறிக்கையை அப்படியே மறைத்து, பிரசாரம் மேற்கொண்டுவருகிறது பா.ஜ.க.

இந்த நிலையில், காங்கிரஸ் தலித்துகளை வெறுப்பதாக பிரதமர் மோடி விமர்சித்திருக்கிறர். மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸைச் சாடிய மோடி, “பழங்குடியினப் பெண் நாட்டின் குடியரசுத் தலைவராக வர வேண்டும் என்று பா.ஜ.க முடிவுசெய்தபோது, காங்கிரஸ் அதை எதிர்த்தது. பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்டோரின் அபிலாஷைகளுக்கு மதிப்பளிப்பது பா.ஜ.க-தான். தேர்தல் நிகழ்ச்சியை ரத்துசெய்துவிட்டு டெல்லியில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டேன். அதில், தலித் நபரை தலைமை தகவல் ஆணையராக நியமிக்க முடிவுசெய்தோம்.
அதே சமயம், காங்கிரஸைப் பாருங்கள்… கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என காங்கிரஸிடம் தொலைபேசியில் தெரிவித்தோம். ஆனால், ஒரு தலித், தலைமை தகவல் ஆணையராகப்போகிறார் என்று தெரிந்ததும் அந்தக் கூட்டத்தை அவர்கள் புறக்கணித்துவிட்டனர். தலித்துகளை அவர்கள் வெறுக்கிறார்கள். பின்னர், அனுதாபம் பெறுவதற்காகப் பொய்களைப் பரப்பி, நாடகம் ஆடுகிறார்கள்” என்றார்.

முன்னதாக நேற்றைய தினம், ஹீரலால் சமாரியா என்பவரை இந்தியாவின் தலைமை தகவல் ஆணையராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதன் மூலம், தலைமை தகவல் ஆணையராகப் பதவி வகிக்கும் நாட்டின் முதல் தலித் நபரானார் ஹீராலால் சமாரியா. இருப்பினும், இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொள்ளாதது குறித்து திரௌபதி முர்முவுக்குக் கடிதம் எழுதிய ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, “தலைமை தகவல் ஆணையர் தேர்வு முற்றிலுமாக மறைத்துவைக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.