“அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார்” – செல்லூர் ராஜு பாராட்டு

மதுரை: “இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார். அண்ணாமலை சொன்னதற்காக அறநிலையத் துறையை கலைக்க முடியுமா?” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரை அழகப்பன் நகரில் மழையால் சேதமடைந்த சாலையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜு கூறுகையில், “மதுரையில் சாலைகள் மழையால் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த சாலைகளை மாநகராட்சி சீரமைக்கவில்லை. மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் அவர்கள் மழை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை. மழைநீர் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ளதால் தொற்று நோய்கள் பரவுகிறது.

மதுரை மாவட்டத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை திமுக திறந்து வைக்கிறது. மதுரையில் இரண்டு அமைச்சர்களும் எந்தவொரு திட்டமும் கொண்டு வரவில்லை. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் வைகை ஆற்றை தேம்ஸ் நதிக்கரை போல மாற்றி இருப்போம். சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கு மின் கட்டணத்தை குறைக்க வழியில்லை.

விஜய் நடித்த லியோ படத்துக்கு கூட்டம் குறைந்துவிட்டது. ஆனால், நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் கூட்டம் மருத்துவமனைகளில் அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியில் கீழிருந்து மேல்மட்டம் வரையிலும் ‘கலெக்‌ஷன், கரெப்ஷன்’ தான். மதுரை மாநகராட்சி செயலிழந்து போய்விட்டது. மதுரை மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். மதுரை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அறநிலையத் துறை தொடர்ந்து செயல்பட வேண்டும். பெரிய கோயில்களின் வருவாயில்தான் சிறு கோவயில்கள் செயல்படுகின்றன. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார். அண்ணாமலை சொன்னதற்காக அறநிலையத் துறையை கலைக்க முடியுமா? அறநிலையத் துறையில் தவறு இருந்தால் சுட்டிக் காட்டலாம்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.