அரச ஊழியர்களைப் போன்று தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்துவதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்

 

  • நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தை சீர்குலைக்கும் செயல்களை ஆதரிக்காதீர்கள்.

16 இலட்சம் அரச துறை ஊழியர்களையும் 80 இலட்சம் தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தின் வெற்றியின் ஊடாக எதிர்காலத்தில் மின்சாரம், எரிவாயு மற்றும் எரிபொருளின் விலைகளை குறைத்து, மக்களுக்கு சிறந்த பொருளாதாரத்தை உருவாக்க முடியும் எனவும், இந்த வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக் கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில்  (07) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன,

“பதினாறு இலட்சம் பேருக்கும் அதிகமாக உள்ள அரச பொறிமுறையை வரவு செலவுத் திட்டத்துடன் பொருத்துவதில், வங்குரோத்தான நாட்டின் எதிர்கால இலக்குகளை எவ்வாறு அடைவது என்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக 2019 ஆம் ஆண்டில் நமது ஆட்சி மாற்றப்பட்ட பிறகு பொருளாதார நெருக்கடி உருவாகியது. அக்காலத்தில் வரிக் கொள்கை மாற்றப்பட்டது. குறிப்பாக தனிநபர் வருமான வரி குறைக்கப்பட்டது. அதேபோன்று, தொடர்ந்தும் அதிகளவில் காணப்பட்ட வரித் தொகைகளை நீக்கி, வரிச் சலுகைகள் வழங்கப்பட்டன. இந்த வரிச் சலுகைகள் காரணமாக இந்த நாடு வேகமாக வீழ்ச்சியடையத் தொடங்கியது. இறுதியாக 2022 ஆம் ஆண்டாகும்போது மத்திய வங்கி பணத்தை அச்சிட்டு சம்பளம் வழங்கும் நிலை தோன்றியது.

அந்த நிலையுடன், நாம் ஒரு விடயத்தை நினைவில் கொள்ள வேண்டும். எப்போதும் ஒரு அரசாங்கம் வீழ்ச்சி அடைவது அந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போதுதான். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எப்போதும், இவ்வாறு வீழ்ச்சி அடைந்த நாட்டைப் பொறுப்பேற்று அதனை மீட்டெடுத்துள்ளார். உதாரணமாக 2015 ஆம் ஆண்டு பத்தாயிரம் ரூபாவால் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டாலும் கூட அது அரச ஊழியர்களின் சம்பள சுற்றறிக்கையின் பிரகாரம், இலங்கை வரலாற்றில் முதன் முறையாக அவர்களின் வருமானத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினார்.

நாடு வங்குரோத்து அடைந்தபோது எரிவாயு லொறிகள் மற்றும் எரிபொருள் பௌஸர்களைக் கண்டவுடன் மக்கள் கைதட்டி ஆரவாரம் அளிக்கும் நிலை தோன்றியது. அரச அலுவலகங்களில் மின்சாரம் இன்றி அரச பொறிமுறை ஸ்தம்பித்தது. இப்போது அனைத்தும் கிடைக்கின்றன. ஆனால் விலை அதிகரித்துள்ளது. அதன் விலைகளைக் குறைக்க வேண்டியுள்ளது. எந்தவித சந்தேகமும் கொள்ள வேண்டாம். நான் அறிந்த இந்நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இறுதியில் எரிவாயு விலையையும் குறைப்பார். மின்சார விலையையும் குறைப்பார். தற்போதுள்ள பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பார். சம்பளத்தையும் அதிகரிப்பார்.

இவ்வாறு ஒரு முறைமையை நடைமுறைப்படுத்தும்போது, அரச தொழிற்சங்கங்கள் பழைய பழக்கத்தின் படி வேலைநிறுத்தம் செய்தால் தான், ஏதாவது இலாபம் கிடைக்கும் என்று நினைத்தால், அது தமக்கு கிடைக்கப்போகும் வருமான வழியை இல்லாமலாக்கும் நடவடிக்கை ஆகும். உதாரணமாக அரச ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்படுவது, நாட்டில் உள்ள ஏனைய பொதுமக்களின் வரி வருமானம் உட்பட சுற்றுலா பயணிகளினால் கிடைக்கும் அந்நியச் செலாவணி போன்ற வருமானம் ஈட்டும் விடயங்களினாலாகும். இதுபோன்ற வேலைநிறுத்தங்கள் இந்த வருமான வழிகளைப் பாதிக்கின்றன.

வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் போது சர்வதேச ஊடகங்கள் அதனை ஒளிபரப்புகின்றன. அதன் காரணமாக இலங்கை ஸ்திரமாக நிலையில் இல்லை என்று நினைத்து, சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தரப் பயப்படுவார்கள். பொருளாதார மீட்சிக்காக தற்போது முன்னெடுக்கப்படும் பணிகளை வெற்றியடைச் செய்ய ஜனாதிபதி எதிர்பார்க்கின்றார். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட, நாம் கடன் பெற்றுள்ள நாடுகளின் கடன்களை மீளச்செலுத்த அவசியமான பொறிமுறைகளை உருவாக்கிக்கொண்டும், சில நாடுகளின் கடன்களை மீளச் செலுத்திக் கொண்டுடிருக்கும் நேரத்திலும் இவ்வாறான பழைய நடவடிக்கைகளின் மூலம் நாடு வீழ்ச்சியடையும். மீண்டும் வங்குரோத்து நிலைக்குச் செல்லும். இந்த உண்மையை அறிந்தே அனைவரும் செயற்பட வேண்டும்.

அரச துறையினரின் சம்பளத்தை அதிகரிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தனியார் துறையினரின் வருமானத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுப்படும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை பலப்படுத்த வேண்டும். வாகனங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பொருட்களையும் இறக்குமதி செய்ய தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நாம் இருந்த நிலை பற்றிய நினைவு இன்றி, இந்தப் பணிகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அது ஒரு துரதிஷ்டவசமான நிலையாகும்.

பலவீனமான இடங்களை ஸ்திரப்படுத்தவே நாம் புதிய சட்ட விதிகளை அறிமுகப்படுத்துகின்றோம். திருடர் திருடர் என்று கூறி பலனில்லை. திருடர்களை பிடிப்பதற்கான ஆசியாவின் வலுவான சட்டத்தை நாம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளோம். அவற்றை நாம் சட்டப்படி அமுல்படுத்த வேண்யுள்ளது. அரசியலமைப்பின் பிரகாரமே நாம் நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதன்படி செயற்பட்டே நாம் இந்தப் பிரச்சினைகளை, இந்த அளவுக்குத் தீர்த்துள்ளோம்.

ஜனாதிபதி தேசிய சபையை நியமித்துள்ளார். அந்த இடத்தில் தேசிய பிரச்சினைகளை முன்வைக்கும் திறன் அனைவருக்கும் உண்டு. பழைய முறைகளில் அரசியல் செய்ய முடியாது என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் நினைவில் கொள்ள வேண்டும். இப்போது வரவுசெலவுத்திட்ட அலுவலகத்தையும் ஸ்தாபித்துள்ளோம். இலங்கையில் உள்ள எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சிவில் சமூகமோ தற்போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு மேலதிகமாக வேறு ஏதேனும் வழிமுறைகள் இருந்தால் அந்த விடயங்களை அந்த அலுவலகத்தில் முன்வைக்க முடியும். ஒவ்வொரு துறையையும் வலுப்படுத்த புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

எனவே முழு அரச பொறிமுறையின் அனைவரும் மிகவும் அவதானமாக, எதிர்காலத்தில் பாரிய மாற்றத்தை வேண்டியுள்ள அரச பொறிமுறையை பலப்படுத்தி முன்னோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கும் பிரகாரம் முழுமையான அரச ஊழியர்களைப் பாதுகாக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.” என்று பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.

PMD

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.