கன்னியாகுமரிக்கு வந்திருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கோயில் பிரசாதம் கொடுக்கச் சென்ற இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையரை, அமைச்சர் மனோ தங்கராஜ் அசிங்கமாகத் திட்டியதாகப் புதிய சர்ச்சை கிளப்பியிருக்கிறது. இது தொடர்பாக தி.மு.க தலைமைக்கும் புகார்கள் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கடந்த மாதம் 28-ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்திருந்தார். நாகர்கோவிலில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த உதயநிதியை, மரியாதை நிமித்தமாகச் சந்தித்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் பிரசாதத்தை வழங்க, இந்துசமய அறநிலையத்துறை கன்னியாகுமரி மாவட்டத் திருக்கோயில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், அறங்காவலர் குழுத் தலைவரான தி.மு.க-வைச் சேர்ந்த பிரபா ராமகிருஷ்ணன் ஆகியோர் அர்ச்சகர் ஒருவருடன் சென்றிருக்கின்றனர்.

அப்போது, அங்கிருந்த அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசமாகி, இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையரை அசிங்கமாகத் திட்டியதாகப் புகார்கள் கிளம்பி, சர்ச்சையாகியிருக்கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய அறங்காவல் குழுத் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், “அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மண்டைக்காடு பகவதி அம்மனின் பிரசாதத்தை வழங்க நானும், அதிகாரி என்ற முறையில் இணை ஆணையரும் சென்றோம். நாகர்கோவிலில் அமைச்சர் உதயநிதி தங்கியிருந்ததால், கிழக்கு மாவட்டச் செயலாளர் மகேஷிடம் அனுமதி பெற்றுதான் அங்கு சென்றோம். அங்கிருந்த அமைச்சர் மனோ தங்கராஜ், ‘நீ எப்படி இங்க வரலாம், வெளியபோலே நாயே’ எனவும், வேறு சில அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்தியும் இணை ஆணையரையும் என்னையும் திட்டி அவமானப்படுத்தினார்.

ஆனாலும் நாங்கள் அமைச்சர் உதயநிதியைப் பார்த்து பிரசாதத்தைக் கொடுத்துவிட்டு, வேகமாக வந்துவிட்டோம். முஞ்சிறை கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஒரு தனியார் கல்வி நிறுவனம் ஆக்கிரமித்து வைத்திருந்ததை மீட்கச் சென்றபோது, அமைச்சர் மனோ தங்கராஜ் தடுத்தார். அதையும் மீறி சொத்தை மீட்டோம். ஒரு கோயில் பணியாளரை கன்னியாகுமரி கோயிலுக்கு பணியிட மாற்றம் செய்ய அமைச்சர் மனோ தங்கராஜ் அழுத்தம் கொடுத்தார். அந்தப் பணியாளரின் முந்தைய செயல்பாடுகள் சரியில்லை என்பதால், அவரை இணை ஆணையர் பணியிட மாற்றம் செய்யவில்லை. இது போன்ற காரணங்களால், இணை ஆணையர்மீதான கோபத்தை மனதில் வைத்துத் திட்டியிருக்கிறார். இது குறித்து முதல்வரிடமும், அமைச்சர் உதயநிதியிடமும் புகாரளித்திருக்கிறோம்” என்றார்.

இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியனிடம் பேசினோம், “அந்த விவகாரத்தில் நான் எதுவுமே பேச விரும்பவில்லை. அங்கு நடந்தது குறித்து தெரியப்படுத்த வேண்டியவர்களுக்குத் தகவல் அனுப்பிவிட்டேன்” என்றார் சுருக்கமாக.
அமைச்சருக்கும், இந்துசமய அறநிலையத்துறைக்கும் என்ன பிரச்னை என விவரம் தெரிந்தவர்களிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், “கன்னியாகுமரி மாவட்டத் திருக்கோயில்களின் அறங்காவல் குழுத் தலைவராக தனது ஆதரவாளரான வேறொருவரைக் கொண்டுவர, அமைச்சர் மனோ தங்கராஜ் முயன்றார். ஆனால், கிழக்கு மாவட்டச் செயலாளரான மேயர் மகேஷின் ஆதரவாளரான பிரபா ராமகிருஷ்ணன் வெற்றிபெற்றுவிட்டார். இணை ஆணையர் ரத்தினவேல் பண்டியனும் அறங்காவல் குழுத் தலைவருடன் இணைந்து செயல்படுகிறார். அமைச்சர் மனோ தங்கராஜ் கூறும் சில விஷயங்களை இணை ஆணையர் நிறைவேற்றிக் கொடுப்பதில்லை.

இதற்கிடையே குமரிக்கு வந்த அமைச்சர் உதயநிதியை நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கவைக்க மேயர் மகேஷ் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், அமைச்சர் மனோ தங்கராஜ் திடீரென மணிமேடைப் பகுதியிலுள்ள ஹோட்டலுக்கு உதயநிதியை அழைத்துச் சென்று, தங்கவைத்துவிட்டார். இதனால் அமைச்சர் மனோ தங்கராஜை மீறி யாரும் உதயநிதியைப் பார்க்கமுடியாத நிலை இருந்தது. அந்த சமயத்தில் அறங்காவல் குழுத் தலைவரும், இணை ஆணையரும் ஒன்றாகச் சென்றது பிடிக்காமல், மனோ தங்கராஜ் அப்படி நடந்துகொண்டிருக்கிறார்” என்றனர்.

இது குறித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜை தொடர்புகொண்டு பேச முயன்றோம். அவர் போனை எடுக்கவில்லை. அமைச்சர் தரப்பில் நம்மிடம் பேசியவர், “ஆவினில் தீபாவளி விற்பனை சம்பந்தமாக அமைச்சர் பிஸியாக இருக்கிறார். பத்மநாபபுரத்திலிருந்து நவராத்திரிக்கு சுவாமிகள் திருவனந்தபுரம் சென்றபோது, உடைவாள் மாற்றும் நிகழ்வில், அங்கிருந்த பிரமுகர்கள் அனைவரிடமும் வாளைக் கொடுத்து போட்டோ எடுக்க வைத்து மரபை மீறிச் செயல்பட்டார் பிரபா ராமகிருஷ்ணன். அவருக்கு இணை ஆணையரும் உடந்தையாக இருக்கிறார். அமைச்சர் மனோ தங்கராஜ் என்றுமே ஆக்கிரமிப்பை அகற்ற எதிராக நிற்கமாட்டார். சிலரின் தூண்டுதலால் அமைச்சர் செல்லும் நிகழ்ச்சிகளில் புரோட்டாகாலை மீறி பிரபா ராமகிருஷ்ணன் செயல்படுகிறார். பிரபா ராமகிருஷ்ணனின் அசிஸ்டன்ட்போல இணை ஆணையர் செயல்படுகிறார்” என்றார்.