உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்திருந்தாலும், அந்த போட்டி குறித்த விமர்சனங்கள் இன்னும் ஓயவில்லை. அந்த போட்டியில் விராட் கோலி 49வது ஒருநாள் போட்டி சதமடித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார். இந்த சாதனைக்காக விராட் கோலி கடைசி கட்டத்தில் மெதுவாக ஆடியதாக விமர்சனங்கள் எழுந்தது. பிட்சுக்கு ஏற்ப அவர் ஆடியதாக சிலர் பாராட்டினாலும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி அணிக்காக ரன் சேர்க்க முயற்சிக்காமல் மெதுவாக விளையாடி தன்னுடைய சொந்த சாதனையை அடைந்துள்ளார் கோலி என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான கவுதம் காம்பீரும் இதனையே தெரிவித்துள்ளார். அவர் விராட் கோலியின் 49வது சதம் குறித்து பேசும்போது, ” விராட் கோலியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. சச்சினின் 49வது சதத்தை சமன் செய்வது எல்லாம் கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய சாதனை. அதனை விராட் கோலியால் மட்டுமே முடியும் என்று நினைக்கிறேன். இருப்பினும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் அவர் கடைசியில் மெதுவாக ஆடியது அணியின் தோல்விக்கும் ஒருகாரணமாக இருந்திருக்கலாம். நல்வாய்ப்பாக அப்படி ஏதும் நடக்கவில்லை.
கடைசி நேரத்தில் சதமடிப்பதற்காக விராட் கோலி மெதுவாக ஆடினார். பிட்ச் கடினமான இருக்கும் என்று முன்பே கணிந்திருந்ததால் அவர் மிடில் ஓவர்களில் களத்தில் இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது. ஆனால் கடைசி இரண்டு மூன்று ஓவர்களில் பெரிய ஷாட்டுகளுக்கு முயற்சித்திருக்கலாம். ஆனால் விராட் கோலி அப்படி ஏதும் செய்யாமல் ஒன்றிரண்டு ரன்களில் கவனம் செலுத்தியிருந்தார். ஒருவேளை தென்னாப்பிரிக்கா அணி சேஸிங்கில் சிறப்பாக ஆடி இருந்தால் விராட் கோலியின் மெதுவான ஆட்டமும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும்.
ஆனால் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றுள்ளது. விராட் கோலி மெதுவாக ஆடியபோது, மற்றொரு பக்கம் ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தார். அவரின் ஆட்டம் தான் விராட் கோலி மீதான அழுத்தத்தை குறைத்தது. ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் சிறப்பாக இருந்தது. விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்தது இந்திய அணிக்கு சிறப்பாக அமைந்துவிட்டது. இனி வரும் போட்டிகளில் விராட் கோலியின் இன்னிங்ஸ் அப்படி இருக்காது என நினைக்கிறேன்” என தெரிவித்தார்.