மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சட்டசபையில் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்கள்தொகைக் கட்டுப்பாடு குறித்து சட்டசபையில் நேற்று பேசிய நிதிஷ் குமார், “பீகாரில் பெண்களிடம் கல்வியறிவு அதிகரித்திருக்கிறது. பெண்கள் கல்வியறிவு பெற்றால், அது மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக்கு வழிவகுக்கும். பொதுவாக பெண்கள் திருமணமாகிச் செல்லும்போது, தங்கள் கணவருடன் அடிக்கடி நெருக்கமாக இருக்கவேண்டியிருக்கிறது.

அதுவும் குளிர்காலத்தில் அடிக்கடி நெருக்கமாக இருப்பதால், குழந்தைகள் பிறப்பு அதிகமாக நடக்கிறது. எனவே, பெண்கள் கல்வியறிவு பெற்றிருந்தால், அவர்களுக்கு அனைத்தும் தெரியும். கணவர் நெருக்கமாக இருக்கும்போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று எடுத்துச் சொல்வார்கள். பீகாரில் குழந்தை பிறப்பு 4.3 சதவிகிதமாக இருந்தது. ஆனால், இப்போது 2.9 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது” என்றார்.
நிதிஷ் குமாரின் பேச்சு ஆபாசமாக இருந்ததாகவும், அதற்காக அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் பா.ஜ.க மகளிர் அமைப்புகளும், தேசிய பெண்கள் கமிஷனும் வலியுறுத்தியிருந்தன. பல தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்புகள் வந்ததையடுத்து, நிதிஷ் குமார்,“என்னுடைய வார்த்தைகளை நான் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். என்னுடைய கருத்துகள் தவறாகக் கட்டமைக்கப்பட்டுவிட்டன. பெண் கல்வி பற்றித்தான் நான் பேசினேன். இருப்பினும், என்னுடைய கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் குணா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, “அவர்களுக்கு வெட்கமேயில்லை… இன்னும் எவ்வளவு கீழ்த்தரமாகத் தாழ்த்துவார்கள் அவர்கள்… I.N.D.I.A கூட்டணியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான இவர், சட்டசபையில் பெண் அரசியல்வாதிகள் முன்னிலையில் கற்பனைக்கு அப்பாற்பட்ட அநாகரிகமான கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். பெண்களை இழிவுபடுத்துவதை எதிர்த்து I.N.D.I.A கூட்டணியிலுள்ள ஒரு தலைவரும், எதுவும் கூறவில்லை.
டிவி பார்ப்பவர்கள் இந்த திமிர்பிடித்த கூட்டணியின் பேச்சை நேற்று பார்த்திருப்பார்கள்… பெண்களைப் பற்றி இப்படிப்பட்ட பார்வைகளை வைத்திருப்பவர்களால், உங்களுக்கு ஏதாவது நன்மை செய்ய முடியுமா… அவர்களால் உங்களின் மரியாதையைக் காப்பாற்ற முடியுமா… உலகத்தின் முன்பு இந்தியாவையே அவமதித்துவிட்டார்கள். தாய்மார்களே, சகோதரிகளே, உங்கள் மரியாதையைக் காப்பாற்ற, என்னால் முடிந்ததைச் செய்வேன்” எனக் காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.