பெங்களூருவில், கொத்தனூர் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த 29 வயதான அபில் ஆபிரகாம், அதே பகுதியில் ஒரு நர்சிங் சேவை மையம் நடத்தி வந்திருக்கிறார். இந்த நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஒருவர், அருகிலுள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். அப்போது இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. ஆனால், அந்த இளம்பெண்ணுக்கு ஏற்கெனவே மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி இருந்திருக்கிறது.

இருப்பினும் அபில் ஆபிரகாமும் அந்தப் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் அந்த இளம்பெண், மூன்று மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்குச் சென்று, தன்னுடைய கணவரிடமிருந்து பிரிந்து செல்ல விரும்புவதாகத் தகராறு செய்திருக்கிறார். மேலும் அங்கிருந்து கிளம்பும்போது, `நான் இங்குத் திரும்பி வரமாட்டேன், என்னைத் தேட வேண்டாம்’ எனக் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். அதனால் சந்தேகமடைந்த இளம்பெண்ணின் கணவர், தன்னுடைய மனைவி குறித்து அவரின் நண்பர்களிடம் விசாரித்திருக்கிறார். அப்போது, அந்த இளம்பெண், அபில் ஆபிரகாம் என்பவருடன் வசித்து வருவது தெரிந்து, அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
அதே சமயம், தன்னுடைய கணவருக்கு, தான் அபில் ஆபிரகாமுடன் வாழ்ந்து வருவது தெரிந்துவிட்டதால், பயந்துபோன இளம்பெண், உயிரை மாய்த்துக்கொள்ள முடிவுசெய்திருக்கிறார். அப்போது அபில் ஆபிரகாம், தானும் உடன் தற்கொலை செய்துகொள்வதாகத் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து, இருவரும் தற்கொலை செய்துகொள்வதென முடிவுசெய்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, கொத்தனூர் பகுதியில் தாங்கள் வசித்து வந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் ஐந்தாவது தளத்தில், தீக்குளித்தனர்.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு விரைந்த அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டனர். இருப்பினும், பலத்த காயமடைந்து அவர்கள் இருவரும் இறந்துவிட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீஸார், இருவரின் சடலங்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.