விருதுநகர் மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அதிகாரி, விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கியிருக்கிறார். இந்த பரபரப்புச் சம்பவம் குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர் ராமன். இவர் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்குதல், பணி நியமன ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்டவற்றுக்கு லஞ்சம் பெறுவதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக, 25.10.2023 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் `ஆபீஸர் அட்ராசிட்டி’ பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராமன் குறித்து ரகசிய விசாரணை நடத்திய கல்வித்துறை அதிகாரிகள், அவரை சென்னை ஆசிரியர் நிர்வாகக்குழு பொறுப்புக்கு உடனடியாகப் பணியிட மாறுதல் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

இதைத் தொடர்ந்து, முதன்மைக் கல்வி அதிகாரி ராமனுக்குப் பிரிவு உபசார விழா ஏற்பாடுகள் நேற்று மாலை நடந்தன. அப்போது அலுவலகத்துக்குள் திடீரென நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் இந்தச் சோதனையைச் சற்றும் எதிர்பாராத மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராமன், அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார். போலீஸாரின் சோதனையில், முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத 13,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை முதன்மைக் கல்வி அலுவலர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் கணக்கில் வராத 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட 3,13,000 ரூபாய் எங்கிருந்து வந்தது… ஆசிரியர் பணிமாறுதலுக்காக பெறப்பட்ட லஞ்சப் பணமா என்ன என்பது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராமனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றனர்.