விளையாட வந்தால் அவர் மீது கற்கள் வீசப்படும்… ஏஞ்சலோ மேத்யூஸின் அண்ணன் ஓபன் டாக்!

Angelo Mathews – Shakib Al Hasan: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையில் பல வித்தியாசமான சர்ச்சைகளும் சம்பவங்களும் நடந்துள்ளன. ஆனால், அதில் முக்கியமான சம்பவம் என சொல்ல வேண்டும் என்றால் அது கடந்த சில நாள்களுக்கு முன் இலங்கை – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடந்தேறியது எனலாம். அதில் வங்கதேச அணி பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், அதில் இலங்கையின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸின் அவுட்தான் பெரும் சர்ச்சையை கிளப்பி கிரிக்கெட் தளத்தில் விவாதத்தையும் உண்டாக்கியது. 
 
இலங்கை அணி அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்தது. சதீரா சமரவிக்ரம – அசலங்கா ஆகியோருக்கு இடையில் நல்ல பார்ட்னர்ஷிப்புடன் இலங்கை நெருக்கடியில்லாமல் இருந்தது. அந்த நேரத்தில் சதீரா அவுட்டாக அடுத்து ஏஞ்சலோ மேத்யூஸ் (Angelo Mathews) களமிறங்கினார். அவர் பெவிலியனில் இருந்து களத்திற்கு வந்து பந்தை எதிர்கொள்ள 2 நிமிடத்திற்கு மேல் எடுத்துக்கொண்டதாக ஷகிப் அல் ஹாசன் கள நடுவரிடம் முறையிட அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. 
 
அவரின் ஹெல்மட் சரியில்லை என்பதால்தான் அதை மாற்றியதாக மேத்யூஸ் கூறினாலும், ஹெல்மட்டை அவர் பார்ப்பதற்கு முன்னரே 2 நிமிடம் முடிந்துவிட்டதாக கூறி மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்தார். இருப்பினும், ஷகிப் அல் ஹாசனிடம் (Shakib Al Hasan) முறையீடை இரண்டு முறை திரும்ப வாங்கிக்கொள்ளும்படி கேட்டாலும் அவர் தனது முடிவை மாற்றவில்லை. எனவே, அவர் எந்த பந்தையும் சந்திக்காமல் Timed Out முறையில் அவுட்டாகி அப்படியே பெவிலியன் திரும்பினார். பந்துவீச்சின் போது ஷகிப் 82 ரன்களை எடுத்தாலும், அவரை மேத்யூஸ் அவுட்டாகி தனது பழியை தீர்த்தார்.
 
மேலும் படிக்க | இந்தியா பைனலுக்கு போக… இந்த அணி செமி-பைனலுக்கு வரணும் – இன்னும் வாய்ப்பு இருக்கு!
 
மேலும் போட்டிக்கு பின்னான செய்தியாளர் சந்திப்பில் பேசிய மேத்யூஸ்,”இது ஷகிப் மற்றும் வங்கதேச அணிக்கு வெளிப்படையான அவமானமாகும். அவர்கள் அப்படி கிரிக்கெட் விளையாடி அந்த நிலைக்கு கீழே இறங்க விரும்பினால், ஏதோ தவறு இருக்கிறது” என்றார். இதுகுறித்து பேசிய ஷகிப்,”நான் போரில் இருந்தது போல் உணர்ந்தேன். நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தேன். விவாதம் நடக்கும்தான். இன்று அது (Timed Out) உதவியது, நான் அதை மறுக்க மாட்டேன்” என்றார். 
 
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஏஞ்சலோ மேத்யூஸின் மூத்த சகோதரரும், இலங்கையின் மூத்த கிரிக்கெட் வீரருமான ட்ரெவின் மேத்யூஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம். வங்கதேச கேப்டனுக்கு விளையாட்டு உணர்வு சுத்தமாக இல்லை, ஜென்டில்மேன் விளையாட்டில் மனிதாபிமானம் காட்டவில்லை. ஷகிப்புக்கு இலங்கையில் வரவேற்பு இருக்காது. அவர் சர்வதேச அல்லது லங்கன் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாட இங்கு வந்தால், அவர் மீது கற்கள் வீசப்படும். அல்லது அவர் ரசிகர்களின் தொல்லையை சந்திக்க நேரிடும்” என்றார். 
 
மேலும் படிக்க | இது சுப்மான் கில் காலம்… தரவரிசையில் முதலிடம்; பாபர் பின்னடைவு – சிகரத்தில் சிராஜ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.