''ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது'' – சரத்குமார் வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசு ஹைட்ரோகார்பன் திட்ட அனுமதியை மறுத்திட வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை மற்றும் கடலாடி வட்டம் மற்றும் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை வட்டம் உள்ளிட்ட 20 பகுதிகளில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தில் அனுமதி கோரி இருப்பது கண்டிக்கத்தக்கது.

விவசாய நிலங்களை பாதித்து, வளர்ச்சி என்ற பெயரில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மக்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து குரல் கொடுத்ததன் வாயிலாக, தமிழ்நாடு அரசு கடந்த 2020-ம் ஆண்டு காவிரிப் படுகை மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றியுள்ளது.

ராமநாதபுரம் காவிரிப்படுகை மாவட்டமாக இல்லாமல் இருந்தாலும், இந்தச் சட்டத்தின்படி, புதிதாக அனுமதி பெற்று எந்த ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் எந்த நிறுவனத்தாலும் அமைக்க முடியாது. ஆனால், மத்திய அரசின் ஒப்புதலுடன், மாநில அரசிடம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கோரியிருப்பதை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. மழைபொய்த்து வறண்ட மாவட்டங்களில் முதன்மையானதாக விளங்கும் ராமநாதபுர மாவட்டத்தில் இது போன்ற திட்டங்கள் செயல்பட அனுமதித்தால் ராமநாதபுரம் கூடிய விரைவில் பாலைவனமாகும்.

நீரியல் விரிசல் முறையை பயன்படுத்தி ஹைட்ரோகார்பன் வளத்தை எடுக்க முனையும் போது, நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்களும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொண்டு, தமிழக அரசு புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க துரித முயற்சி மேற்கொள்ளும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு உடனடியாக அனுமதி மறுத்து ஆணை பிறப்பிக்க வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.