சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா-வின் கண்டனங்களை மீறி, பாலஸ்தீனத்தின் காஸா நகரில் ஒரு மாதத்துக்கும் மேலாக இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது. போரின் தொடக்கத்தில், தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறி இஸ்ரேலுக்குப் போர் ஆயுதங்களை அனுப்பிய அமெரிக்கா, சர்வதேச நாடுகளிடமிருந்து வலுவான போர் எதிர்ப்புக் குரல்கள் வந்த பிறகு, `இஸ்ரேலியப் படைகள் காஸாவை ஆக்கிரமிப்பது இஸ்ரேலுக்கும், இஸ்ரேலிய மக்களுக்கும் நல்லதல்ல’ என தற்போது கூறிவருகிறது. அமெரிக்காவின் இந்த இரட்டைவேடம், பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கதையாக, இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.

சர்வதேச நாடுகளிடமிருந்து இத்தகைய வலுவான எதிர்ப்புகள் வருவதற்குக் காரணம், ஹமாஸை அழிக்கிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் 10,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுதான். குறிப்பாக, 4,000-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மட்டும் இதில் உயிரிழந்த பிறகும், இஸ்ரேல் இந்தப் போரைத் தொடர்வது கவலையளிக்கிறது.
உரிமைக் குரலுக்கும், அதிகார வேட்கைக்கும் இடையே நடக்கும் இந்தப் போரில் எதற்காக அப்பாவி மக்களும், சிறுவர்களும் கொல்லப்பட வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர்களையும் சேர்த்தே, போர் நிறுத்தக் குரல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் கால்களை இழந்து, புன்னகைக்க மறந்து, மழலையாய் கனவுகளை எண்ணி அழும் சிறுமிகளின் கண்ணீர்த் துளிகள் ஈரங்கொண்ட நெஞ்சங்களை உலுக்குகின்றன.

`இனி எப்படி பள்ளிக்குச் செல்வேன்?’
இஸ்ரேல் தாக்குதலால் கால்களை இழந்த லயன் அல்-பாஸ் (Layan al-Baz) எனும் 13 வயது சிறுமி, `நான் எப்படி மீண்டும் பள்ளிக்குச் செல்வேன்’ எனக் கண்ணீரோடு கேட்பது, கலங்கடிக்கச் செய்கிறது. தற்போது காஸாவின் கான் யூனிஸிலுள்ள நாசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறுமி லயன் அல்-பாஸ், கால்கள் துண்டிக்கப்பட்டப் பிறகு தனக்கு அளிக்கப்பட்ட வலிநிவாரணிகளின் தாக்கம் குறைந்ததும், “எனக்கு செயற்கை கால்கள் வேண்டாம். என்னுடைய நண்பர்களெல்லாம் நடக்கும்போது, நான் எப்படி மீண்டும் பள்ளிக்குச் செல்வேன்..?” என தன்னுடைய தாய் லாமியா அல்-பாஸிடம் (Lamia al-Baz) கண்ணீர்விட்டு அழுகிறார்.
`நிறைய வலிகள்… டாக்டர் ஆகணும்!’
அதே மருத்துவமனையில் தீக்காயங்கள் பிரிவில் ஒரு காலை இழந்த நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமி லாமா அல்-அகா, “செவிலியர்கள் என்னை இங்கு மாற்றியபோது, உட்காருவதற்கு எனக்கு உதவுமாறு அவர்களிடம் கேட்டேன். அப்போதுதான், என் கால் துண்டிக்கப்பட்டதையே நான் அறிந்தேன். நிறைய வலிகளை நான் அனுபவிக்கிறேன், இருந்தாலும் நான் இன்னும் உயிரோடு இருப்பதற்கு அந்தக் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். செயற்கை கால் மூலம் என்னுடைய படிப்பை நான் தொடர்வேன். அதன் மூலம், மருத்துவராகவேண்டும் என்ற கனவை நான் நிச்சயம் அடைய முடியும், என் குடும்பத்துக்கும் நான் வலுவாக இருக்க முடியும்” என்றார்.

`இனிமேல் கால்பந்து ஆட முடியாதா..?’
இவர் மட்டுமல்லாமல், இஸ்ரேல் தாக்குதலில் ஒரு காலை இழந்த 14 வயது சிறுவன் அஹ்மத் அபு ஷாமா (Ahmad Abu Shahmah), “சிகிச்சை முடிந்து நான் எழுந்தபோது, என்னுடைய கால்கள் எங்கே என்று என் சகோதரனிடம் கேட்டேன். அதற்கு, `கால் இருக்கிறது. மயக்க மருந்து காரணமாக உன்னால் அதை உணர முடியவில்லை’ என என்னிடம் பொய் சொன்னான். அடுத்தநாள் என் உறவினர்கள் உண்மையைச் சொன்னதும், `இனி என்னால் தினமும் நடக்கவோ, கால்பந்து விளையாடவோ முடியாது’ என்பதுதான் நினைவுக்கு வந்தது. கதறி அழுதேன். தாக்குதல் தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்புதான், ஓர் அகாடமியில் சேர்வதற்கு கையெழுத்திட்டுவிட்டு வந்தேன்” என்று கண்ணீர்விட்டார்.
அஹ்மத் அபு ஷாமா, எஃ.ப்சி பார்சிலோனா (FC Barcelona) கால்பந்து அணியின் தீவிர ரசிகர். அவரின் உறவினர்கள் ரியல் மேட்ரிட் (Real Madrid) கால்பந்து அணியின் தீவிர ரசிகர்கள். அந்த உறவினர்களில் ஒருவரான ஃபரித் அபு ஷாமா (Farid Abu Shahmah), “காலத்தைப் பின்னோக்கித் திருப்பி, அஹ்மத் அபு ஷாமாவுக்கு மீண்டும் கால்கள் கிடைத்தால், ரியல் மேட்ரிட்டை ஆதரிப்பதை விட்டுவிட்டு, நானும் பார்சிலோனா அணியின் ரசிகராக மாற தயாராக இருப்பேன்” என்று உருகினார்.

பிஞ்சுகளின் ரத்தத் துளிகளிலும், கண்ணீர்த் துளிகளிலும்தான் போரின் வெற்றி அடங்கியிருக்கிறதா… நாளைய தலைமுறையின் கனவுகளைப் பறித்துவிட்டு யாருக்காக இந்தப் போர்… இனியும் மனிதத்தை இழக்க வேண்டாம். இந்தப் பிஞ்சுகள் மீண்டும் புன்னகைப்பதற்காகவாவது போர் முடியட்டும்!