Titanic: ரூ.61 லட்சத்துக்கு ஏலம்விடப்படும் டைட்டானிக் கப்பலின் Dinner Menu; உணவு வகைகளின் லிஸ்ட் இதோ

உலக அளவில் இன்றுவரை மிகப் பிரபலமானதாகக் கருதப்படும் டைட்டானிக் கப்பல் ஏப்ரல் 11, 1912-ம் ஆண்டில், அட்லான்ட்டிக் பெருங்கடலில் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்தச் சோகச் சம்பவத்தில், சுமார் 1,500 பேர் வரை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் நடந்து 111 ஆண்டுகள் ஆன பின்பும், டைட்டானிக் கப்பல் குறித்த ஆராய்ச்சிகளும், நீர்மூழ்கிக் கப்பல் மூலம் அதைக் காணச் சுற்றுலாப் பயணிகள் செல்வதும் இன்றளவும் தொடர்ந்து நடந்துவருகின்றன.

டைட்டானிக் கப்பல்

மேலும், அந்தக் கப்பல் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்கு, இன்றளவும் மக்கள் மத்தியில் ஆர்வமும் இருந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், டைட்டானிக் கப்பலில் பயணித்த கனடாவின் நோவா ஸ்கோடியாவைச் சேர்ந்த லென் ஸ்டீபன்சன் (Len Stephenson) என்பவர், 2017-ல் இறந்தார். அவரது உடைமைகள் சோதிக்கப்பட்டபோது, அதில் டைட்டானிக் கப்பலின் முதல் வகுப்பு பயணிகளின் இரவு உணவு மெனு கிடைத்திருக்கிறது.

அந்த மெனுவில் அப்போதைய கோடீஸ்வரர்களான ஜே.ஜே ஆஸ்டர், பெஞ்சமின் குகன்ஹெய்ம், சர் காஸ்மோ டஃப்-கார்டன், மோலி பிரௌன் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட ஆடம்பரமான உணவுகளான சிப்பிகள் (oysters), ஸ்குவாப் எ லா கோடார்ட் (Squab a la Godard), ஸ்பிரிங் லாம்ப் (Spring Lamb), டூர்னெடோ ஆஃப் பீஃப் எ லா விக்டோரியா (Tournedo of Beef a la Victoria), மல்லார்ட் டக் (mallard duck), ஆப்ரிகாட்ஸ் போர்டலூ (Apricots Bourdaloue) உள்ளிட்ட உணவுகள் குறிப்பிடப்பட்டிருந்திருக்கின்றன. இந்த இரவு உணவு மெனுவை `ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் & சன் லிமிடெட்’ ஏல நிறுவனம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

டைட்டானிக் கப்பலின் இரவு உணவு மெனு

இது குறித்துப் பேசிய ஏல நிறுவனத்தின் ஆண்ட்ரூ ஆல்ட்ரிட்ஜ் என்பவர், “கிடைத்திருக்கும் இந்த மெனு, டைட்டானிக்கில் பயணித்த முதல் வகுப்பு பயணிகளுக்கான முன்பு பதிவுசெய்யப்படாத மெனு. உயிரிழந்த லென் ஸ்டீபன்சன் அதை வைத்திருந்தார் என்பது அவரின் குடும்பத்தினர் உட்பட யாருக்கும் தெரியாது. அவர் இறந்த பிறகு, அவரது உடைமைகளை அவரின் மகள் – மருமகன் ஆகிய இருவரும் சோதித்திருக்கின்றனர். அப்போது இந்த மெனுவை, பழைய புகைப்பட ஆல்பத்திலிருந்து கண்டெடுத்திருக்கின்றனர். இந்த நிலையில், டைட்டானிக்கின் முதல் வகுப்பு இரவு உணவு மெனு 60,000 பவுன்டுக்கு (இந்திய மதிப்பில் ரூ. 61,18,260) ஏலம் விடப்படவிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.