சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் வலுவிழக்க வாய்ப்புள்ளது.
குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும், (நவ. 9, 10) பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 11-ம் தேதி சில இடங்களிலும், 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை நிலவரம்: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.
நவ. 8-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி, கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் 9 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் கெடாரில் 8 செ.மீ., திரூவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், ஈரோடு மாவட்டம் கொடிவேரி, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.