பாலஸ்தீனத்தின் காஸாவில் 36 நாள்களாக நடக்கும் இஸ்ரேலின் தாக்குதலில், 11,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இதுவரை உயிரிழந்திருக்கின்றனர். குழந்தைகள் மட்டுமே 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். காஸாவில் சராசரியாக ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை கொல்லப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் தெரிவித்திருக்கிறார். பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காதவரைப் போர் நீண்டுகொண்டே போகும் எனக் கூறும் இஸ்ரேலுக்கு, சர்வதேச நாடுகளிடமிருந்து தொடர்ந்து கண்டனங்கள் வலுத்துவருகின்றன .
மருத்துவமனைகளில், அகதிகள் முகாம்களில் தண்ணீர், உணவு, மின்சாரம், மருந்துப் பற்றாக்குறை போன்றவற்றால் நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், பிரிட்டனில், போர் மரண நினைவு தினத்தைக் குறிக்கும் போர் நிறுத்த நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் 30,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பாலஸ்தீனர்களுடனான தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும்விதமாக, காஸா பகுதியில் இஸ்ரேலின் குண்டுவீச்சுக்கு எதிராகப் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து போராட்டம் நடத்தினர்.
போர் நிறுத்த நாள் காரணமாக இந்தப் போராட்டத்தை ரத்து செய்ய பிரிட்டன் அமைச்சர் உத்தரவிட்டபோதும், போராட்டம் தொடர்ந்தது. இதை எதிர்த்து வலதுசாரிக் குழுக்கள் செனோடாப் போர் நினைவுச் சின்னத்துக்கு அருகில், பாராளுமன்றம், வெஸ்ட்மின்ஸ்டரில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டன. அப்போது காவல்துறைக்கும் அவர்களுக்கும் மத்தியில் மோதல் ஏற்பட்டது. இது குறித்துப் பேசிய காவல்துறை தரப்பு, “பாலஸ்தீன ஆதரவு தேசிய அணிவகுப்பின் ஒரு பகுதியாக, இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
அதேபோல, கணிசமான எண்ணிக்கையிலான தீவிர வலதுசாரிக் குழுக்கள் செனோடாப் போர் நினைவுச் சின்னத்திற்கு அருகில், பாராளுமன்றம் மற்றும் வெஸ்ட்மின்ஸ்டரில் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டன. சில எதிர்ப்பாளர்கள் அதிகாரிகள்மீது பாட்டில்களை வீசினர். அதைத் தொடர்ந்து, தீவிர வலதுசாரி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த கலகத் தடுப்புக் காவல்துறையினர் விரைந்து, கலவரத்தைக் கட்டுப்படுத்தினர். மேலும், தீவிர வலதுசாரிப் பிரிவைச் சேர்ந்த கிட்டத்தட்ட 100 பேர் கைதுசெய்யப்பட்டனர்” என்றது.
இது குறித்து லண்டன் மேயர் சாதிக் கான் மற்றும் ஸ்காட்லாந்தின் முதலமைச்சர் ஹம்சா யூசுஃப் ஆகியோர் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மனை விமர்சித்தனர். இது குறித்து அவர்கள், “தீவிர வலதுசாரிகளின் நடவடிக்கைகளுக்குக் காரணம், உள்துறை அமைச்சர் ‘காவல்துறை, பாலஸ்தீனிய ஆதரவுக் குழுக்களுக்கு ஆதரவாக இருக்கிறது’ எனக் கூறியதுதான்.
காவல்துறையின் கூற்றுப்படி, பாலஸ்தீன ஆதரவு பேரணியில் மிகப்பெரிய அளவில் மக்கள் கலந்துகொண்டனர். ஆனால் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனால் இன்று நடந்த நிகழ்வில் சந்தேகம் இருக்கிறது. இனி இது போன்று நிகழாமல் தடுக்க எங்களிடம் உள்ள அனைத்து அதிகாரங்களையும் திட்டங்களையும் பயன்படுத்துவோம்” எனத் தெரிவித்தனர்.
லண்டனில் நடைபெற்ற இந்த பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.