எளிய மனிதர்களின் உலகத்தை வாஞ்சையாக சொன்னதில் பிரமிப்பை ஏற்படுத்திய படம், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. இப்படத்திற்கு வசனம் எழுதிய ராசீ. தங்கதுரை உடல் நல பாதிப்பு காரணமாகக் காலமனார்.
அடிப்படையில் எழுத்தாளரான இவர், ‘தேன்’ உள்பட சில படங்களிலும் நடித்தும் இருக்கிறார். ராசீ. தங்கதுரையின் நினைவுகள் குறித்து இங்கே கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறார் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தின் இயக்குநர் லெனின் பாரதி.

”அவர் நல்ல எழுத்தாளர் என்பதைத் தாண்டி அருமையான மனிதர். நல்ல நண்பர். தேனி மண் சார்ந்த, வட்டார வழக்குகளில் சிறுகதைகள் நிறையவே எழுதியிருக்கார். என் நண்பர்கள், உதவி இயக்குநர்கள் எனப் பலரும் ராசீ.தங்கதுரைக்கும் நண்பர்கள்னால அவரோட சிறுகதைகள், நாவல்களை படிக்கற வாய்ப்பு அமையும். சொந்த மாவட்டத்து கலைஞரா அவர் அறிமுகமானார்.
தங்கதுரை தான் அவரோட பெயர். அவர் அப்பா ராமையா, அம்மா சீனியம்மா இவங்களோட பெயர்களின் முதல் எழுத்துக்களை சேர்த்து ராசீ.தங்கதுரைன்னு வச்சுக்கிட்டார். நான் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படமா உருவாகும் போது, தேனி மண் சார்ந்த, வட்டார வழக்கு சார்ந்து எழுதினால் தான் சரியா இருக்கும்னு நினைச்சேன். தேனி மாவட்டம் கோம்பையில் தான் நான் பிறந்தேன். ஆனா, நான் சின்ன வயசிலேயே சென்னை வந்துட்டதால, மண் சார்ந்து எழுத ஒருத்தர் தேவைப்பட்டார்.
தேனி மக்களின் வாழ்வியலை முழுவதுமாகப் புரிந்து கொண்டவர்னு அவரைச் சொல்லலாம். என் உதவி இயக்குநர் புவன ராஜன் மூலமா அவரை சந்திச்சேன். தேனி மாவட்டத்தில் உள்ள புதுப்புது எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலரிடமும் பழகுவார். அவர்களை ஊக்கப்படுத்தி நிறைய எழுத வைப்பார். ரொம்பவே வெள்ளந்தியான மனிதர். என் படம் தவிர ‘தேன்’ படத்திற்கும் வசனம் எழுதியிருக்கார்.

‘மேற்குத் தொடர்ச்சி மலை’யில் அவரை நடிக்க வச்சிருந்தோம். சில படங்களிலும் அவர் நடிச்சிருப்பார். கடந்த ரெண்டு வருஷமாகத்தான் அவருக்கு உடல்நிலை பாதிப்ப்பு ஆச்சு. ஆண்டிப்பட்டியில் பக்கத்தில் ரொம்பவே சின்ன கிராமத்தில் வசித்து வந்தார். சென்னை வரணும், சினிமா நண்பர்களை சேர்த்து வைக்கணும்.. இப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், கிராமத்தில் யதார்த்தமாக வெள்ளந்தியாக வாழ்ந்து வந்தார். அவர் எழுத்தில் உள்ள மண் மணம் போலவே, தன் வாழ்க்கையையும் வாழ விரும்பினார். நல்ல நண்பரை இழந்திருக்கிறேன்” என்கிறார் லெனின் பாரதி.