திருமணம் முதல் குழந்தைக்கு பூ முடி எடுத்தல் வரை – குலதெய்வ கோயிலை மறக்காத `குக் வித் கோமாளி' புகழ்!

இன்று காலை தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோயிலுக்கு தனது குடும்பத்துடன் வந்த புகழ், கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு, தனது பெண் குழந்தைக்கு பூ முடி எடுத்து சாமி தரிசனம் செய்தார்.

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானவர் புகழ் (எ) புகழேந்தி. தனது திறமையால், பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று, இன்று திரைத்துறையில் தனக்கெழொரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறார். இவர், கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த பென்ஸியா என்ற பெண்ணைக் காதலித்து வந்ததாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி தனது காதலி பென்ஸியாவை எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார் புகழ்.

குலதெய்வ கோயிலில் குடும்பத்துடன் புகழ்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் – சுயம்பு பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில், தனது குடும்பத்தார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் புகழ் – பென்ஸியா திருமணம் சிறப்பாக நடைபெற்றிருந்தது. இந்த கோயில், புகழின் குலதெய்வ கோயில் எனவும் கூறப்படுகிறது. அதன் பின்னர், திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியிருந்தார்.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 27-ம் தேதி புகழ் – பென்ஸியா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இது குறித்த மகிழ்ச்சியைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அச்சமயம் பகிர்ந்திருந்தார் புகழ். அதில், “இரு முறைத் தாய் வாசம் தெரிய வேண்டுமெனில் பெண் பிள்ளையைப் பெற்றெடுக்க வேண்டும் என்பார்கள். என் தாரத்தின் மூலமாக எனக்குக் கிடைத்த மற்றொரு தாய் என் மகள்… மகள் அல்ல, எங்கள் மகாராணி பிறந்திருக்கிறாள். தாயும் சேயும் நலம்!” எனப் பதிவிட்டிருந்தார்.

குலதெய்வ கோயிலில் குடும்பத்துடன் புகழ்

தற்போது தனது குழந்தைக்கு பூ முடி (பிறந்த முடி எடுத்தல்) எடுக்க விரும்பிய புகழ், தனது குடும்பத்தாருடன் தீவனூரில் உள்ள குலதெய்வ கோயிலுக்கே மீண்டும் வந்திருந்தார். கடந்த வருடம் இதே ஆலயத்தில்தான் அவரது திருமணம் நடைபெற்றிருந்தது. இன்று காலை தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோயிலுக்கு தனது குடும்பத்துடன் வந்த புகழ், கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு, தனது பெண் குழந்தைக்கு பூ முடி எடுத்து சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, தங்களது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.