விடிய விடிய தொடர் மழை –  புதுவை, காரைக்காலில் புதன்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி: புதுச்சேரியில் விடிய, விடிய தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. தொடர் மழையால் குடியிருப்பு பகுதியில் தேங்கிய நீரை மோட்டார் மூலம் அகற்ற முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார். அதேபோல், தொடர் மழையால் புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் நேற்று இரவு முதல் பொழிய தொடங்கிய மழை விடிய விடிய தொடர்ந்து பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் வழக்கமாக பாதிக்கப்படும் ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், பாவாணன் நகர், நடேசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. இதில் ஒரு சில வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்தது. தொடர்ந்து இன்று அதிகாலை முதலே மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்க தொடங்கியுள்ளது.

குழந்தைகள் தின விழா ரத்து: இந்நிலையில் தொடர் மழையால் காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற இருந்த குழந்தைகள் தின விழாவை கல்வித்துறை ஒத்திவைத்தது. விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க இருந்த நிலையில் மழையின் காரணமாக விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, புதுச்சேரியில் நேற்று காலை 8:30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை 11.9 செ.மீ. மழை பதிவானது. இன்று காலை முதல் மாலை வரை 3.62 செ.மீ மழை பதிவானது. புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் புதுச்சேரி தேங்காய் திட்டு துறைமுக பகுதி மற்றும் மீனவ கிராமங்களில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.

புதுச்சேரி தேங்காய் திட்டு துறைமுகப் பகுதி, வீராம்பட்டினம், பூரணங்குப்பம் நல்லவாடு, வைத்திகுப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

மக்கள் பாதிப்பு: புதுச்சேரியில் பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளான வெங்கடா நகர், கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர், பூமியான் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் காரணமாக மழை நீரானது பல்வேறு வீடுகளில் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நகராட்சி சார்பாக பல்வேறு இடங்களில் மின் மோட்டார்கள் வைத்து நீரை வெளியேற்றிய போதும் தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

நகரப்பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளான ரெயின்போ நகர், சூர்யா நகர் பகுதிகளில் மழை நீர் தேங்கியது. முட்டியளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் வெளியே செல்ல முடியாத சூழல் உள்ளது. மேலும் வாகனங்கள் மிதந்தபடி செல்கின்றன. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர், அமைச்சர் ஆய்வு: மழை பாதிப்புகளை முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். கிழக்கு கடற்கரை சாலை, மடுவூபேட், சாமிபிள்ளை தோட்டம், ரெயின்போ நகர், பவழ நகர், வாழைக்குளம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர். மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மோட்டார் மூலம் நீரை உடனே வெளியேற்ற அதிகாரிகளுக்கு முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

இதற்கிடையே, எல்லைபிள்ளைசாவடியில் மரம் விழுந்து உயர் அழுத்த மின்சார கேபிள் அறுந்தது. தொடர் மழையால் நேற்று முன்தினம் இரவில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டு பின்னர் சீரானது. மின் விநியோகத்தில் பெரியளவில் பாதிப்பு இல்லை. இருப்பினும் எல்லை பிள்ளை சாவடியில் பெரிய மரம் உயர் அழுத்த மின்சார கேபிள் மீது விழுந்த காரணத்தால் மின்சார கேபிள் அறுந்தது. இதனால் பெரியார் நகர், பவழ நகர், செல்லம் நகர் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்துறை ஊழியர்கள் 10க்கும் மேற்பட்டோர் விடாத மழையிலும் உயர் அழுத்த மின் கேபிளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். பூமியான்பேட்டையில் டிரான்ஸ்பார்மர் விழுந்தது. பத்து இடங்களில் மரங்கள் விழுந்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.