விடுதலைப் போராட்ட வீரரும் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான தோழர் என்.சங்கரய்யா, 102 வயதில் காலமாகியிருக்கிறார். சாதி, மத பேதமற்ற, பொருளாதார சுரண்டலற்ற ஒரு சமுதாயத்தைப் படைக்க வேண்டும் என்ற எண்ணம்கொண்ட இளைஞர்களுக்கு, சங்கரய்யாவைத் தவிர வேறு யாரும் முன்னுதார மனிதராக இருந்துவிட முடியாது.

102 ஆண்டுகள் வாழ்ந்த சங்கரய்யாவின் வரலாறு, ஒரு தனி மனிதரின் வரலாறு மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு மட்டுமல்ல, அவரது வரலாறு என்பது நூற்றாண்டுக்கால தமிழ்நாட்டின் அரசியல், சமூக வரலறு என்று சொன்னால் மிகையாகாது.
கோவில்பட்டியில் ஒரு வசதியான குடும்பத்தில் 1922-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி பிறந்த சங்கரய்யா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தார். அந்தக் காலகட்டத்தில், சுதந்திரப் போராட்டம் என்ற பெரும் நெருப்பு, மதுரை நகரிலும் பற்றியெரிந்து கொண்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் மாணவர்களைத் திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். பட்டப்படிப்பில் இறுதியாண்டுத் தேர்வு நெருங்கிய நேரத்திலும், அவர் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்தார்.

இறுதியாண்டுத் தேர்வு எழுதுவதற்கு 15 நாள்களுக்கு முன்பாக திடீரென்று அவரை போலீஸார் கைதுசெய்தனர். அப்போது, சிறையில் அடைக்கப்பட்ட சங்கரய்யா, 18 மாதங்கள் சிறைக் கொடுமைகளை அனுபவித்தார். அதன் காரணமாக, அவரால் பட்டப்படிப்பை நிறைவுசெய்ய முடியாமல் போனது.
மதுரை சதி வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சங்கரய்யா உள்ளிட்டோர், நாடு விடுதலை அடைந்தபோது சிறையிலேயேதான் இருந்தார்கள். நாட்டின் விடுதலையைச் சிறையிலேயே அவர்கள் கொண்டாடினார்கள். அதன் பிறகுதான், அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் நான்கு ஆண்டுகள், சுதந்திரத்துக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் என மொத்தம் எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்தவர் சங்கரய்யா. இன்றைய இளைஞர்களுக்கும், வருங்கால சந்ததிக்கும் அவர் விட்டுச் சென்ற செய்திகளும் அறிவுரைகளும் அனுபவங்களும் ஏராளம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சங்கரய்யா விகடனுக்கு நேர்காணல் அளித்தார். அதில், ஒவ்வொரு கேள்விக்கு அவர் அளித்த பதில்கள், முக்கியமானவை.

“எட்டு ஆண்டுகள் சிறை வாழ்க்கை, மூன்று ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை, எண்ணிலடங்கா போராட்டங்கள், இயக்கப்பணிகள் என நீண்டநெடிய அனுபவம் கொண்டவர் நீங்கள். தற்போது, பழைய வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது எப்படி இருக்கிறது?” என்ற கேள்விக்கு,
“பல கஷ்டங்களுடன் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடினோம். அப்போது, ஒட்டுமொத்த இந்தியாவும் ஒற்றுமையாக இருந்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட் தோழர்கள், ஃபார்வர்டு ப்ளாக் பிரிவினர் எனப் பலருடைய நோக்கமும் சுதந்திரத்தை நோக்கியே இருந்தது.
மிகப்பெரிய கூட்டத்துக்கு காந்திதான் தலைமை. இளைஞர் இயக்கத்துக்கு பகத்சிங், சுகதேவ், ராஜகுரு போன்றவர்கள் பெரும் உந்துசக்தியாக இருந்தனர். எல்லாருமே போராடினோம். அந்த ஒற்றுமைதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை இங்கிருந்து தூக்கியடித்தது. அதைப் பற்றி பேசவேண்டுமென்றால், பேசிக்கொண்டே இருக்கலாம். கடந்த காலத்தையே பார்த்துக்கொண்டு இருப்பதைவிட, இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பார்ப்பதுதான் முக்கியம்” என்றார் சங்கரய்யா.
எப்போதும் சாதிமறுப்புத் திருமணங்களை ஆதரிப்பவராக சங்கரய்யா இருந்துவந்தார். தன் குடும்பத்தில் ஏராளமான சாதிமறுப்புத் திருமணங்களை, அவரே முன்னின்று நடத்திவைத்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் அதிகரித்தபோது, அதைக் கடுமையாகக் கண்டித்தார். ‘சகோதரிகளின் காதலை அங்கீகரியுங்கள் சகோதரர்களே’ என்று மேடைகளில் வேண்டுகோள் விடுத்தார்.
அது பற்றி அவரிடம் கேட்டபோது, ‘சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு தரப்பட வேண்டும். காதல் திருமணங்களில் மேல் சாதி, கீழ் சாதி என்று பார்க்கும் இழிநிலை முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும். கட்சிப் பாகுபாடின்றி அனைவரும் ஆணவக்கொலைகளுக்கு எதிராகப் போராட வேண்டும்’ என்றார் சங்கரய்யா.

நாட்டின் விடுதலைக்கான போராட்டம், இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் என ஏராளமான போராட்டங்களைச் சந்தித்தவர் சங்கரய்யா. அவரிடம், தமிழ்நாட்டில் பெரும் எழுச்சியை ஏற்படுத்திய ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்த கேள்வியை முன்வைத்தோம். அதற்கு, ‘அது வரவேற்கத்தக்க போராட்டம். ஜல்லிக்கட்டு, தமிழர்களின் அடையாளம் என்று லட்சக்கணக்கான மக்கள் திரண்டுவந்தனர். அந்தப் போராட்டம் வெற்றிபெற்றது. அது மக்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தமிழக மக்கள் காண்பித்த ஒற்றுமையையும் அக்கறையையும் கல்வி, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்ற மாநிலத்தின் மற்ற முக்கியப் பிரச்னைகள் அனைத்திலும் காண்பிக்க வேண்டும். அரசை நிர்பந்திப்பதுதான் போராட்டத்தின் சரியான பாதை’ என்றார் சங்கரய்யா.
கொள்கையில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளாத, கட்சி எடுத்த முடிவுகளில் கறார் காட்டுகிற தலைவரான சங்கரய்யாவின் இன்னொரு பக்கம், பலரும் அறியாதது. தமிழ் இலக்கியத்தின்மீது தீரா ஆர்வம் கொண்டவர் அவர். இளைஞர்களிடம் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், தமிழ் இலக்கியம், புத்தக வாசிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவங்களை வலியுறுத்தத் தவறமாட்டார். இவர், பாரதியாரின் தீவிர பற்றாளர்.
‘இளைய தலைமுறைக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்’ என்று அவரிடம் கேட்டோம். அதற்கு, ‘சங்க இலக்கியங்களை வாசியுங்கள். தமிழ் இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே.சா., கதிரேசன் செட்டியார், மு.ராகவ ஐயங்கார், மு.வ., கல்கி இது போன்ற ஆளுமைகள் நமக்கு பல இலக்கியச் செல்வங்களை அளித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அவர்களிடம் தொடங்கி, தேடித்தேடி வாசியுங்கள்.

மாணவர்கள் அரசியல், பொருளாதாரம் பற்றி செந்தமிழில் பேசுங்கள். அது போன்ற விஷயங்களை செந்தமிழில் பேசுவது இன்றைக்கு முற்றிலும் குறைந்துவிட்டது. சங்க இலக்கியங்களை விட்டுவிடாதீர்கள். ஆயிரம் வருடங்களைக் கடந்தும் அவற்றின் பெருமைகளை நிற்கவைக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது’ என்றார் சங்கரய்யா.