Doctor Vikatan: என் நண்பனின் அம்மா, உறவினர்களில் சிலர் என அதிகாலையில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிரிழந்ததைப் பார்த்திருக்கிறேன். அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட என்ன காரணம்…. அந்த நேரத்தில் தூக்கத்தைத் தவிர்த்தால் இந்தப் பிரச்னையிலிருந்து தப்பிக்க முடியுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். பெரும்பாலும் ஹார்ட் அட்டாக் என்பது அதிகாலை 3 மணி முதல் காலை 7 மணி வரையில் அதிகம் நிகழ்வதைப் பார்க்கிறோம். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. உடலில் இயற்கையான ஹார்மோன்கள் சுரந்துகொண்டிருக்கும். அதிகாலையில் கார்ட்டிசால், எபிநெஃப்ரைன் (epinephrine), நார்எபிநெஃப்ரைன் (norepinephrine), கேட்டேகாலமைன் (catecholamine) போன்றவற்றின் அளவுகள் சற்று அதிகமாகவே இருக்கும்.
சமீபத்திய ஆய்வொன்றில், பிளாஸ்மினோஜென் ஆக்டிவேட்டர் இன்ஹிபிட்டர் 1 (Plasminogen activator inhibitor-1) என்பதன் அளவும் அதிகாலையில் அதிகமாக இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. ரத்தக்கட்டிகள் உருவாகும்போது, இயல்பாகவே நம் உடல் அவற்றை உடைக்கும். அந்தச் செயலைத் தடுப்பதுதான் இந்த பிளாஸ்மினோஜென் ஆக்டிவேட்டர் இன்ஹிபிட்டர் 1-ன் வேலை.

இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால் வருவதுதான் ஹார்ட் அட்டாக் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த வகையில் மேற்குறிப்பிட்ட விஷயமும் அதிகாலை மாரடைப்புக்கான காரணங்களில் ஒன்றாக அமைகிறது.
காலை வேளைகளில்தான் அதிக மாரடைப்புகள் நிகழ்கின்றன என்றால், அந்த நேரத்தில் தூங்காமலே இருப்பது சரியா என்று சிலர் கேட்கிறார்கள். அப்படி அர்த்தமில்லை. உங்களுடைய தூக்க சுழற்சியை முறைப்படுத்துங்கள். இரவில் நீண்டநேரம் டி.வி பார்ப்பது, மொபைல் பயன்படுத்துவது என தூக்க நேரத்தைத் தள்ளிப்போடாதீர்கள்.

சரியான நேரத்துக்கு, சரியான உணவுகளைச் சாப்பிடுங்கள். குடி மற்றும் சிகரெட் பழக்கங்களில் இருந்து விலகி இருங்கள். தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்குங்கள். ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்குப் பழகினாலே உங்கள் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும். வருடத்துக்கொரு முறை முழு உடல் பரிசோதனை செய்து பாருங்கள். அதில் உங்கள் இதயநலனும் தெரியவரும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.