இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு இந்தியர்கள் வேலைக்காகச் சென்றிருக்கிறார்கள். குறிப்பாகக் கேரளாவிலிருந்து மத்தியக் கிழக்கு நாடுகளுக்குப் பயணிப்பவர்கள் அதிகம். அந்த வகையில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த செவிலியரான நிமிஷா பிரியா, ஏமன் நாட்டிற்கு பணிக்காகச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், அவர் பணிசெய்த இடத்தில் அவருக்கும், அவரின் முதலாளியான அப்தே மஹ்தி என்பவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.

இதனால், இந்தியா திரும்ப முடிவெடுத்தார் நிமிஷா பிரியா. ஆனல் அவரின் பாஸ்போர்ட்டை கொடுக்காமல் அப்தே மஹ்தி எடுத்து வைத்துக்கொண்டார். இதனால், அந்த பாஸ்போர்ட்டை எடுப்பதற்காகத் திட்டம் தீட்டிய நிமிஷா பிரியா, அப்தே மஹ்திக்கு மயக்க ஊசி போட முடிவெடுத்திருக்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக மயக்க மருந்து டோஸ் அதிகமாகி அவர் உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாக விசாரித்த ஏமன் காவல்துறை நிமிஷா பிரியாவை கைது செய்து 2017-ல் சிறையில் அடைத்தது.
இந்த வழக்கு ஏமன் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து ஏமன் நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் நிமிஷா பிரியா மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்தார். இதற்கிடையில், 2017 முதல் ஏமன் நாட்டின் நடக்கும் உள்நாட்டுப் போர் காரணமாக இந்தியர்கள் ஏமன் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால், நிமிஷா பிரியாவின் தாயார் ஏமன் செல்வதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தன.

இந்த நிலையில், நிமிஷா பிரியாவின் தாயார் உச்ச நீதிமன்றத்தில் ‘தன் மகளைக் காப்பாற்ற ஏமன் செல்ல அனுமதிக்க வேண்டும்’ என மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு தொடர்பாகப் பேசிய நிமிஷா பிரியாவின் தாயார் தரப்பு வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன், “நிமிஷா பிரியாவுக்கு எதிரான தூக்குத் தண்டனையை நிறுத்துவதற்கு, அப்தே மஹ்தியின் குடும்பத்தாருடன் பேசுவது மட்டுமே ஒரே வழி. அவர்களுடன் சமாதானம் பேசினால் பிரியாவின் உயிர் காப்பாற்றப்பட வாய்ப்பிருக்கிறது.
அங்கு Blood Money (இறந்தவரின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு, அவர்கள் கேட்கும் நஷ்ட ஈடான பணம் வழங்குவது. ஒருவேளை பாதிக்கப்பட்டவர் மன்னித்தால் குற்றவாளியின் தண்டனை தள்ளுபடி செய்யப்படும்) எனும் வழக்கம் இருக்கிறது. அதற்கு நிமிஷா பிரியாவின் தாயாருக்கு ஏமன் செல்வதற்காக அனுமதி வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “இன்று முதல் ஒரு வாரத்திற்குள் பிரியா நிமிஷாவின் தாயார் ஏமன் செல்லும் முடிவு குறித்துப் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டது. முன்னதாக, நிமிஷா பிரியா தனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து ஏமன் நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவைத் தள்ளுபடி செய்த ஏமன் உச்ச நீதிமன்றம் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை உறுதி செய்திருக்கிறது.
கடந்த ஆண்டு நிமிஷா பிரியாவின் விடுதலைக்காக வாதிடும் ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்’ நீதிமன்றத்தில், “இந்திய அரசின் தலையீடுகள் மூலம் நிமிஷா பிரியாவின் சார்பாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உதவு உத்தரவிட வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட மறுத்து, அவரது தண்டனைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளைத் தொடருமாறு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.